இந்தியாவை வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலத்தில் சென்னை மாகாணம் என்பது தமிழர்கள், மலையாளிகள், ஆந்திரர்கள் மற்றும் கன்னடம் பேசுபவர்கள் எல்லோரும் சேர்ந்த ஒரு மாகாணமாக இருந்தது. அதனால் அப்போது திராவிடர்கள், திராவிட மொழிக் கலாச்சாரம், திராவிட நாடு என்று எண்ணியதும் எழுதியதும் பேசி வந்ததும் ஓரளவுக்குப் பொருத்தமானதாகும். ஆனால் சுதந்திரம் அடைந்தபிறகு மலையாளிகள் தங்களுக்கு என்று கேரள மாநிலமும், தெலுங்கர்கள் தங்களுக்கு என்று ஆந்திர மாநிலமும், கன்னடியர்கள் தங்களுக்கு என்று கர்நாடக மாநிலமும் பெற்றுத் தனித்தனியே பிரிந்து வாழத் தொடங்கிய பிறகு இந்தத் திராவிட உணர்வு தமிழர்களைத் தவிரப் பிற மலையாளிகள், கன்னடியர்கள், தெலுங்கர்கள் ஆகியவர்களிடம் வெகுவாகக் குறைந்து விட்டது. இதற்கு மூல காரணம் அவர்கள் எல்லோரும் தனித்தனி மாநிலங்களைப் பெற்றது மட்டுமல்ல, மொழி, பண்பாடு முதலியவை ரீதியாகவும் அவர்கள் திராவிடப் பண்பை வெகுவாக இழந்து விட்டனர். அதோடு தமிழர்களை அன்னியர்களாகவும் எண்ணிச் செயல்படத் தொடங்கிவிட்டனர்.வரலாற்று ரீதியாகப் பார்த்தால் தமிழர்களுக்கு உள்ளது போன்ற திராவிட மொழியுணர்வு, திராவிடக் கலாச்சாரப் பற்று பிற திராவிட மொழியினருக்கு அவ்வளவாகக் கிடையாது. இதற்கு முக்கிய காரணம் காலப்போக்கில் வடமொழிக் கலப்பாலும் வடமொழியாளர் ஆதிக்கத்தாலும் திராவிடக் கலாச்சாரத்தின் தாக்கம் அவர்களிடம் குறைந்து கொண்டே வரலாயிற்று. உதாரணமாக மொழிரீதியாகப் பார்த்தால் தமிழ் நீங்கலாக உள்ள மலையாளம் முதலிய பிற திராவிட மொழிகள் எல்லாம் தங்களது எழுத்துக்களையும் எழுத்து வரிகளையும் வடமொழியினைப் பின்பற்றி அமைத்துக் கொண்டன. அதனாலேயே திராவிட மொழிக்குச் சிறப்பாக உள்ள ற, ழ ஆகிய எழுத்துக்கள் மலையாளம் தவிர்த்த பிற திராவிட மொழிகளில் தற்போது இல்லை. மலையாளத்திலும் தந்நகரத்திற்கும் நின்னகரத்திற்கும் தனித்தனி எழுத்துக்கள் கிடையாது. சொல்லளவிலும் வடமொழிக் கலப்பும் அவற்றில் மிகமிக அதிகமாக உள்ளன. மேலும் அவற்றின் பழைய இலக்கியங்கள் எல்லாம் இராமாயணம், பாரதம் போன்ற வடமொழி இலக்கியங் களின் மொழிபெயர்ப்புக்களாகவே இருக்கும். அதுமட்டுமல்ல, அவற்றின் இலக்கணங்களைக் கூட வடமொழியிலே எழுதும் மரபும் அங்கே தோன்றிவிட்டது. இதனால்தான் கால்டுவெல் போன்ற திராவிட மொழியாராய்ச்சியாளர்கள் நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ் ஒன்றைத் தவிரப் பிற திராவிட மொழிகளால் வடமொழியின் துணையின்றி வாழ முடியாது என்று உறுதியாகக் கூறிச் சென்றுள்ளனர். இன்றைக்கும் வடமொழிக்கும், வடமொழியிலக்கியத்துக்கும் வடமொழியாளர்களுக்கும் தமிழ்நாடு நீங்களான பிற தென்னக மாநிலங்களில் கண்மூடித்தனமான போற்றுதல் உள்ளது. அங்கு, முன்பு போலவே வடமொழி ஒரு தேவ மொழி, வடமொழியிலிருந்துதான் எல்லா மொழிகளும் தோன்றின, வடமொழியாளர்கள் கடவுளுக்குச் சமமானவர்கள் என்ற எண்ணம் வேறூன்றி உள்ளது. அந்த மாநிலங்களில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் வடமொழிக்கென்று தனித்துறைகள் இல்லாமல் இருப்பது மிகவும் அரிது.
இவ்வாறு கலாச்சார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தனித்தனியாகப் பிரிந்த பிறகு கேரளம் முதலிய பிற மாநிலத்தவர்கள் காலப்போக்கில் தமிழர்களை அன்னியர்களாகவும் இன்னும் சொல்லப்போனால் விரோதிகளாகவும் பார்க்கக் கூடிய மனப்பான்மையும் வளர்ந்துவிட்டது. இந்தப் போக்கை, காலஞ்சென்ற பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை வள்ளல் அழகப்பச் செட்டியாரின் நிதியுதவியால் இயங்கிய அன்றைய திருவாங்கூர்ப் பல்கலைக்கழகத்தில் 1951-54 இல் தமிழப் பேராசிரியராக இருந்தபோது கண்டு மிகமிக வருத்தப்பட்டுப் பேசியுள்ளார். இன்றைக்கும் தமிழ்நாட்டில் ஆந்திரர் முதலிய திராவிட மொழியாளர்கள் உள்ள அளவுக்கு கேரளம் முதலிய தென்னிந்திய மாநிலங்களில் தமிழர்கள் அதிகமாகவும் வளமாகவும் இல்லை.கோவை, பொள்ளாச்சி ஆகிய நகரங்களிலும் அவற்றை ஒட்டிய பிற நகரங்களிலும் இருந்து ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கேரளாவுக்குச் செல்லும் மணியார்டர் பணம் பல கோடியைத் தாண்டும் என்று பொள்ளாச்சித் தொழிலதிபர் நா.மகாலிங்கம் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். இன்றைக்கும் தமிழ்நாட்டிலிருந்து அரிசி, காய்கறிகள், பருப்பு வகைகள் முதலிய விவசாய விளைபொருள்களும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லும் மின்சாரமும் பல கோடி ரூபாய்களைத் தாண்டும். இன்று சென்னை நகரில் மட்டும் 40% க்கு மேல் ஆந்திரர்கள் உள்ளதாக ஆந்திர மகாசமாஜத்தினர்களே கூறிவருகின்றனர்.தமிழ்நாட்டிலிருந்து இவ்வளவு இலாபம் பெற்றும் கேரளம் போன்ற தென்னாட்டு மாநிலங்கள் தமிழ்நாட்டுக்கு நியாயமாகக் கிடைக்கக்கூடிய தண்ணீர் போன்றவற்றைத் தர மனமில்லாதது மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தின் ஆணையையே துச்சமாக நினைத்து தூர எறிந்து கொண்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள மொழியியல் துறைகளில் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியவை கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளன. ஆனால் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றில் உள்ள மொழியியல் துறைகளில் தமிழைக் கற்பிக்க ஏற்பாடு கிடையாது. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் விதிக்கு மாறாக கன்னடப் பேராசிரியர் மொழியியல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நேரத்தில் இருபதாம் நூற்றாண்டின் முன்பாதியில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த ஒரு துக்ககரமான நிகழ்ச்சி நினைவு கூரத்தக்கது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்றைய சென்னைப் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியாராய்ச்சி துவங்கப்பட்டு தமிழ் முதலிய திராவிட மொழிகளுக்குப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது மலையாளப் பேராசிரியராக இராமலிங்கம் பிள்ளை என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் நியமனம் பற்றிய அறிவிப்பு பல்கலைக்கழக ஆட்சிக் குழுவின் ஒப்புதலுக்காக வந்தது. அப்போது அதில் இருந்த மலையாளிகள் எல்லோரும் அவரது நியமனத்தை ஒட்டு மொத்தமாக எதிர்த்தார்கள் - காரணம், அவர் தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக. அவர் பிறப்பால் தமிழரே, ஆனால் பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாம் திருவனந்தபுரத்தில்தான். அவர் மலையாளத்தில் பல நூல்கள் எழுதி சொந்தமாக மலையாள அச்சகம் வைத்து வெளி யிட்டார். மலையாளத்தில் பல அகராதிகள் தயாரித்துத் தாமே வெளியிட்டவர். அவரது மலையாள மொழிப் புலமை காரணமாக மலையாள மொழிபெயர்ப்பாளராக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு 80 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தவர். இத்தனைச் சிறப்பு வாய்ந்த ஒரு மலையாள அறிஞரை அவர் தமிழன் என்பதற்காக அன்று அவரது பேராசிரியர் பதவியை மலையாளிகள் பறித்தார்கள். இதுமட்டுமல்ல, மலையாள மொழிக்கு அரும்பெரும் தொண்டாற்றிய மூன்று பெருமக்களில் உள்ளூர் பரமேஸ்வர அய்யர் ஒருவர். பொதுவாக இவரது மலையாளத் தொண்டுக்காக மதிப்பும் மரியாதையும் இருந்தாலும் அவர் தமிழன் என்ற காரணத்திற்காக அவரது சிறப்பைக் குறைத்துப் பேசிடும் மலையாளிகளும் உண்டு.
வெள்ளைக்காரர்கள் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் கல்வெட்டுத் துறையின் தென்னகக் கிளை ஒன்று தமிழ்நாட்டில் உள்ள உதகமண்டலத்தில் இருந்தது. அதற்கு கர்நாடகத்தைச் சேர்ந்தவர் காலப்போக்கில் அதிகாரியாக வந்தார். அவ்வளவுதான், சந்தடி செய்யாமல் தனது சொந்த மாநிலத்தில் உள்ள மைசூருக்குக் கல்வெட்டுத் துறையைத் தூக்கிக் கொண்டு போய் வைத்துவிட்டார். இதேபோல கர்நாடகத்தைச் சேர்ந்த பொம்மை என்பவர் டில்லியில் இந்தியாவின் கல்வி மந்திரியாக சிறிது காலமே இருந்தார். அவர் இருந்த சிறிது காலத்திற்குள்ளேயே சென்னையில் இருந்த இந்திய வரலாற்று ஆராய்ச்சி நிறுவனத்தை பெங்களூருக்குக் கடத்திக் கொண்டு போனார். அதுமட்டுமா? அதோடு தன் மாநிலத்துக்காரராகிய அனந்தமூர்த்தியை சாகித்ய அக்காடமியின் தலைவராக்க உதவினார். அனந்த மூர்த்தி பங்கிற்கு சுமார் கால்நூற்றாண்டு காலமாக சென்னையில் இருந்து வந்த சாகித்ய அக்காடமியின் தென்னிந்தியக் கிளையை தனது சொந்த மாநிலத்தின் தலைநகரான பெங்களூருக்குப் புரட்டிக் கொண்டு போய்விட்டார். 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஒரு தமிழன் சாகித்ய அக்காடமியின் தென்னிந்தியப் பிரிவுக்குச் செயலராக வரவில்லை. ஆனால் மலையாளி முதலிய பிற செயலாளராகியுள்ளனர்.
இதுபோன்ற அநியாயங்கள் எல்லாம் வெளியில் தெரிந்தவை. தெரியாமல் - நமது அண்டை மாநிலத்தவர்கள் எல்லாம் இன்னும் எந்தெந்த வகைகளில் எல்லாம் தமிழ்நாட்டுக்குக் கேடுகள் செய்து வருகின்றனரோ தெரியவில்லை.
மத்திய அரசு நிறுவனங்களில் பிறர் ஆதிக்கம்
தமிழ்நாட்டில் பல மத்திய அரசு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் உயர்ந்த பதவிகளில் எல்லாம் பெரும்பாலும் பிற மாநிலத்தவர்கள்தான் இருப்பர். குறைந்த ஊதியம் உடைய சாதாரணப் பதவிகளில் தான் தமிழர்கள் இருப்பார்கள். நெய்வேலியில் நிலக்கரி நிறுவனம் ஆரம்பித்த தொடக்கத்தில் பெரும்பாலும் மலையாளிகளே அதிகமான அளவில் இருந்ததைப் பெரியார் தனது விடுதலைப் பத்திரிகையில் அப்பட்டமாக வெளியிட்டார்.
இப்பொழுதும் மத்திய அரசு தமிழ் நாட்டில் நிறுவனங்கள் ஏற்படுத்தினால் அதில் தமிழர்கள் சின்னஞ் சிறிய பதவிகளில்தான் இருப்பார்கள். காரில் போய் குளுகுளு அறையில் அமரும் பெரும் பதவிகளில் எல்லாம் பிற மாநிலத்தவர்கள்தான் இருப்பார்கள். இதைவிட வெட்கக் கேடு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறையின் பெரும் தலைவர், சென்னை மாநகரக் காவல்துறை ஆனையாளர் ஆகிய எல்லோரும் தமிழர் அல்லாதவர்களே. இன்னும் இது போன்ற பாதகச் செயல்கள் எவ்வளவோ உண்டு. விரிப்பின் பெருகும்.
தமிழர்கள் பல ஆண்டுகளாகப் போராடித்தான் தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றார்கள். ஆனால் தற்போது எந்தவித முயற்சியும் போராட்டமும் செய்யாமல் பொறாமை காரணமாகக் கர்நாடகத்தவர் கன்னட மொழிக்கும் செம்மொழித் தகுதி வேண்டும் என்று கூப்பாடு போடத் தொடங்கிவிட்டார்கள். இதற்கேற்ப தமிழுக்குச் செம்மொழித் தகுதி கொடுக்கலாம் என்று சிபாரிசு செய்த அதே இந்திய மொழிகள் நிறுவனத்தலைவர் கன்னட மொழியும் 1800 ஆண்டுகளுக்கு மேல் பழைமை உடையதால் கன்னட மொழிக்கும் செம்மொழித் தகுதி தரலாம் என்று எழுதியுள்ளாராம். ஆக சாணிச் சட்டியும் சருவச் சட்டியும் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
முனைவர் அ.காமாட்சிநாதன்,
மொழியியல் துறை முன்னாள் இயக்குநர்,
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
நன்றி:தென்செய்தி