12/08/2006

பூர்வீகமும் - கடற்பாறையின் சிற்ப காலமும்


முந்தைய சோவியத் கூட்டமைப்பின் நகரமான "கியேவ்"விலிருந்து அனா என்றொரு பெண்மணி பட்டறையில் கலந்துகொள்ள வந்திருந்தாள். ஏறத்தாழ முப்பது வயதிருக்கும், மிகுந்த பெண்மையுடனும், கவர்ச்சியாகவும் இருந்தாள்.பட்டறையின் கடைசி நாளும் முடிந்துவிட்டது.ஓர் இரவுதான் மிச்சம்.ஏரியைப் பார்த்திருக்கும் உணவகத்தில் நாங்கள் நாலு பேரும் உணவருந்துவதென முடிவானது. நாங்கள் அனைவரும் கியேவ் பெண்மணி அனாவுக்காகக் காத்திருந்தோம்.

இந்தப் பட்டறை முடிவதற்குள் இவளுடன் மிகவும் அந்நியோன்யமான ஒரு சம்பவம் நடக்கப்போவது எனக்கு அப்போது தெரியாது. ஆகவே மிகவும் சாதாரணமாக ஒதுக்குபுறமான கிராமத்தில் காசு மாற்றும் சிரமத்தைப் பற்ற்ப் பேசிகொண்டோம்.பிறகு வங்கி ஊழியரிடம் எனக்குப் பரிந்துரைத்து என் பயண ஓலைகளை மாற்ற உதவி செய்தாள்.நன்றியை எதிர்பாராது விறுக்கென்று திரும்பி மறைந்துவிட்டாள்.பட்டறை நேரங்களில் எப்பவும் ஒரு கும்பல் அவளைச் சுற்றி கலகலவென்று இருக்கும். போஸ்னிய இலைஞன் அவளிடம் மனதைப் பறிகொடுத்திருந்ததும் அவள் பார்வையில் சிக்குவதற்கும், அவளோடு தனிமையில் கதைப்பதற்கும் அவன் சமயம் பார்த்திருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது.

இரவு எட்டு மணியாகியும் சூரியன் மறைவதற்குத் தயங்கிக் கொண்டிருந்தன். நாங்கள் வைன் ஆர்டர் பண்ணி சுவைத்துக் கொண்டிருந்தபொழுது அனா வந்து சேர்ந்தால். மாலை வேளைக்கான நீண்ட உடையில் இருந்தால். வந்த உடனேயே அன்றைய இரவு நிகழ்ச்சிகளுக்கும் பிரெஞ்சு மொழி பரிவர்த்தனைகளுக்கும் அவள் பொறுப்பேற்றுக் கொண்டாள்.மெல்லிய நீண்ட கிளாஸில் பறிமாறிய வைன் உள்ளெ இறங்க இறங்க, எங்கள் இறுக்கம் தளர்ந்து அந்நியோன்யம் கூடியது.அனாவின் சிரிப்பலை அடிக்கடி எழும்பி ஏரி அலைகளுக்கு மேல் தவழ்ந்து போனது.

என்னுடைய முழுப்பெயரையும் கேட்டுவிட்டு,"ஓ! நீங்கள் தமிழரா?" என்றாள் ஆச்சரியமான குரலில்."மன்னிக்க வேண்டும், இனிமேல் அந்தத் தவறைச் செய்யமாட்டேன்" என்றேன். அவள் சிரித்துக் கொண்டே "தமிழ் மிகவும் கடினமான மொழியாயிற்றே! எப்படி சமாளிக்கிறீர்கள்?"என்றாள். "என்ன செய்வது, கஷ்டம் தான். ஆனால் எங்கள் ஊரி ஒரு நூதனமான வழக்கமுண்டு. தாய்மாரே தங்கள் பிள்ளைகளுக்குப் பாலுடன், மொழியையும் புகட்டிவிடுவார்கள். அது மாத்திரமில்லை. பிறந்தவுடன் ஒரு தடித்த அகராதியையும் கையிலே தந்துவிடுவார்கள்" என்றேன்.

என் தாயார் மிகவும் கண்டிப்பானவள். இப்படி முன்பின் தெரியாத ஆண்களுடன் நான் வைன் அருந்துவதைப் பார்த்தால் "என் கதி அதோ கதிதான்" என்று கூரிவிட்டு கலகல்வென்று சிரித்தாள். பல தலைகள் இப்போது எங்கள் பக்கம் திரும்பின. நடன இசை ஆரம்பமானது. போஸ்னிய இளைஞன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு "நடனம் ஆடலாம?"என்றான். இவளும் யோசிக்காமல் சரியென்று உடனே எழுந்துவிட்டாள். நடனமேடையில் ஒருவருமில்லை. இவர்களிருவர் மட்டுமே ஆடினார்கள். பலநாள் பிரிந்திருந்து கூடியிருந்த காதலரைப்போல் ஆரத்தழுவி ஆடினர்.

நடனமேடையில் நின்றவாறே அவள் தன் தலைமயிறை விரித்து விட்டாள். அப்படி விரித்த பிறகு அவள் அழகு முற்றிலும் புதிதாக்கப்பட்டது. கண்களில் மயக்கும் தன்மை கூடியது. சிறிது தள்ளாட்டமும் தெரிந்தது. கலகலவென சிரிக்கும் குரல் கூட இப்போது கொஞ்சம் மாறிவிட்டது.

இப்பொழுது எங்கள் உணவின் பிரதான அம்சம் வந்தது. இத்த பிரெஞ்சுக்காரர்கள் உணவுக் கலையை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். உணவின் அலங்காரமும், ருசியின் நேர்த்திமையும் உலகை மறக்கச் செய்தன.ஏரிக்கரைக் காற்று வீச, சிவப்பு வைன் மெல்லிய போதை தர, எங்கள் மனது முன்பின் அறியாத ஒருவித சந்தோசத்தில் மிதந்துகொண்டிருந்தது.

திடீரென அனா மீண்டும் பேசினாள்."என்னுடைய அம்ம மிகவும் கண்டிப்பானவள். என் கற்பைக் காப்பதில் தன்னுடைய வாழ்நாளில் அரைவாசியை அவள் செலவழித்தாள். என் நண்பிகள் ஆண் சிநேகிதர்களுடன் வெளியே போஇ கேளிக்கைகளில் ஈடுபடும்போது நான் கோப்பைகளைத் துடைத்துக்கொண்டு வீட்டிலேயே இருந்தேன். நேரத்தை எவ்வளவு வீணாக்கிவிட்டேன்." போஸ்னியாக்காரனும் கொஞ்சம் குடி மயக்கத்தில் இருந்தான். அந்தத் துணிவில் அவன், "அனா, கவலையை விடு. நான் உதவி செய்கிறேன். YOU CAN MAKE UP FOR THE LOST TIME" என்றான். எல்லாரும் சிரித்தார்கள். அனாவின் சிரிப்பு கலகலவென்று மேலோங்கி நின்றது.

அனா அக்கம்பக்கம் பார்த்து ரகசியக் குரலில் "உங்களுக்கு இது தெரியுமா?" என்று கேட்டபடியே மேசையில் குனிந்தாள். நாங்கள் எல்லாம் ஆர்வத்துடன் எங்கள் கழுத்துக்களை வளைத்து அவள் பக்கம் நீட்டித் தலைகள் மேசையில் படக் காத்திருந்தோம். அவளோ கலகலவென்று சிரிக்கத் துவங்கினாள். "தனக்குத் தேவை இல்லாத விடயத்தைத் தெரிவதற்கு மனிதன் எவ்வளவு தாழ்ந்து போகவும் தயங்கமாட்டான்" என்றாள். எங்களுக்கு வெட்கமாகி விட்டது.

இன்னும் வைன் வேண்டும் என்று சிறுபிள்ளைபோல அடம்பிடித்தாள்.எங்களுக்கு மிகப்பெரிய பங்கை ஊற்றிக்கொண்டும், அவளுக்கு ஒரு சொட்டு கிளாஸில் வார்த்துக் கொடுத்தோம். அசிங்கமாகத் திட்டியபடியே அவள் எழுந்து நின்றாள். இரண்டு பக்கமும் அவள் உடல் ஆடியது.

"என்னுடைய அம்மா மிகவும் கண்டிப்பானவள். நான் உங்களுக்குச் சொல்கிறேன். மிகக் கவலையாகச் சொல்கிறேன். என்னுடைய நீண்ட கன்னிமையை கலைக்க ஆள் தேவை. உங்களில் யார் தயாராக இருக்கிறீர்கள்" என்று நேராக உரத்த குரலில் கேட்டாள்.

"நன்றி கோழைகளே!" என்றாள். படுக்கையில் சாய்ந்தபடி எங்களைக் கூர்ந்து பார்த்தாள். தன் வலது கையை மார்புக்குள் விட்டு இடது மார்பை எடுத்து எறிந்தால். பிறகு வலது மார்பைப் பிடுங்கி என் மூஞ்சியில் வீசினாள். பஞ்சுப்பொதி போல ஒன்று பறந்து வந்து என் முகத்தில் லேசாக உரசிக் கீழே விழுந்தது.

எங்கள் நிறுவனத்தில் மாதாந்த புதினப் பத்திரிகையை அசிரத்தையாக ஒரு நாள் தட்டிக் கொண்டிருந்தேன்.அதிலே அனாவின் படம் வெளியாகி இருந்தது. அதற்கு கீழே இப்படி போட்டிருந்தார்கள்.

பெண்கள் மறுவாழ்விற்காக இடையறாது பாடுபட்ட கியேவ் பெண்மணி, பத்து வருட காலமாக புற்று நோயுடன் போராடி இறுதியில் காலமானார். அவருடைய பெயர் அன்னலட்சுமி சேரகோவ்.

புலம் பெயர்ந்த ஈழ எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் மகாராஜாவின் இரயில் வண்டி என்ற சிறுகதை தொகுப்பிலிருந்து... நன்றி - எஸ். பாலபாரதி

கடந்த மாதம் சிட்னியின் போண்டாய் கடற்கரையில் உலகின் வெகுசில நகரங்களில் மட்டுமே நடைபெரும் "SCULPTURE BY THE SEA" என்கிற சிற்ப கண்காட்சியிலிருந்து திரும்பும் வழியில் பேருந்திலும், தொடர்வண்டியுலுமான பயன நேரத்தில் படித்த சிறுகதை இன்னமும் ஒரு கணத்த உணர்வை உள்ளுக்குள் மீட்டிக்கொண்டிருக்கிறது. அது எதனால் என்றுத் தெரியவில்லை.

5 comments:

Anonymous said...

நிழற்படமும் கதையும் நன்றாகவிருந்தது.

said...

நல்ல கதையையும்; படங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி!
யோகன் பாரிஸ்

said...

யோகன்,

வருகைக்கும் பிழை சுட்டியமைக்கும் நன்றி.
பிழை திருத்தப்பட்டது.

Anonymous said...

எழுத்து கொஞ்சம் சாரு ஸ்டைல்ல இருக்க மாறி இருக்கு. பதிவுக்கு நன்றி.

said...

பார்த்தா,
வருகைக்கு நன்றி.
// Partha said...

எழுத்து கொஞ்சம் சாரு ஸ்டைல்ல இருக்க மாறி இருக்கு. பதிவுக்கு நன்றி. //


இவ்வெழுத்து என்னுடையதல்ல, எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களுடையது.
தட்டச்சு மட்டும் தான் என்னுடையது...:-))