3/25/2006

தமிழீழப் போராட்டமும், தமிழ் தேசியமும்!

ஈழம் பற்றிய இன்றைய தமிழக இளைஞர்களின் புரிதல் பற்றி பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இன்று. இதில் புரிந்து கொள்ள என்ன வேண்டியிருக்கிறது. தமிழைப் பற்றி என்னுடைய புரிதல் என்று நான் ஏதாவது எழுத முடியுமா? நான் பேசத் தொடங்கிய பொழுது தமிழில் தான் அம்மா, அப்பா என்று கூறினேன் அல்ல்து கூற வைக்கப்பெற்றேன். அதே போல் தான் ஈழத்தின் புரிதலும். எனக்கு கருத்து தெரியாத வயதிலிருந்தே எனது வீட்டில் எங்கு நோக்கினாலும் போராளிகளின் படம் தான் இருக்கும். ஓரளவு கருத்து தெரிய ஆரம்பித்த பொழுது ஈழத்துப் போராளிகள் சுதந்திரப் போராட்ட மாவீரர்களாவேத் தெரிந்தார்கள்.

கருவறையிலிருந்து வெளியே வரத் துடிக்கும் குழந்தையின் போராட்டத்திற்கு தாய் தன் வலியை பொருட்படுத்தாமல் குழந்தை வெளியே வர வேண்டும் என்ற ஒரு எண்ணம் தான் இருக்குமேயொழிய, வலியாறப் பொறுக்காது கொல்ல நினைப்பாளோ?

தமிழீழமும், ஆயுதப் போராட்டமும் எழுந்ததற்கான நிகழ்வுகளை உற்று நோக்கினால் புரியும் ரணமும் அதனுடைய வேதனையும்!

1983ல் நடந்த ஒட்டுமொத்த இனப்படுகொலை இன்னமும் நெஞ்சினில் இருந்து அகல மறுக்கின்றது.ஒரே நாளில் 1000 பேர் கழுத்தறுபட்டும், உயிரோடும் எரிக்கப்பட்டார்கள். ஆண்களூம் பெண்களும் பொதுவில் நிர்வாணப்படுத்தப் பட்டார்கள். இவையனைத்தும் சிங்கள இனவெறியர்கள் மற்றும் அவர்களின் பேரினவாத ஆதரவு அரசின் ஒத்துழைப்போடு நடைபெற்றன. இவ்வளவு அவமானங்களையும் தாண்டி அமைதியான முறையிலா போராட முடியும்?

1987ல் இராஜிவ் அரசிற்கும் & பேரினவாதி ஜெயவர்த்தனே அரசிற்கும் உடன்பாடு கையெழுத்தாகிறது. அதாவது இந்திய இராணுவப் படையினர் இலங்கையில் அமைதி காப்பார்களென்று. பிரபாகரன் எவ்வளவோ முயன்றும் சிங்கள - இந்திய அரசின் பிரகடனம் கையெழுத்தாவதை தடுக்க இயலவில்லை. அதற்கு மாறாக இராஜீவ், இந்தியப் படை புலிகளுக்கு உதவவே இலங்கை வருகிறது என்றும் தமிழ் மக்களின் மானம் காக்கப் படும் என்றும் உறுதியளிக்கின்றார். இதை பிரபாகரனின் யாழ்ப்பானத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பேச்சிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் காத்த அமைதி திலீபன் என்ற மாவீரனின் மரணவாக்குமூலத்தினால் உடைந்து இன்றும் ஆயுதப் போராட்டமாகத் தெறிக்கிறது.

பதின்ம வயதில் நான் கண்ட ஆவணப்படங்களும், நேரிடையாய் சந்தித்த இரு போராளிகளின் வாக்குமூலமும் என்னுள்ளே அவ்வயதில் வெறியை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. இன்னமும் கூட ஈழத்தில் பிறந்திருக்கக் கூடாதாவென்ற ஏக்கம் அவ்வப்போது எழுவதும் உண்டு. எந்திரத் துப்பாக்கி ஏந்திப் போராடும் எம் சகோதரர்க்கு துணையாய் இருந்திருக்கலாமே என்ற எண்ணமும் எழுந்ததுண்டு. அது ஒவ்வொரு சராசரி இந்தியனுக்கு எழும் "பிணப்பெட்டியின் மேல் தேசியக் கொடி" போன்ற எண்ணம். ஆனால் அதற்கு முரணான வாழ்க்கையைத் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.

இன்றைய தமிழக இளைஞர்கள் இதைப் பற்றி முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதினாலும், தமிழக இளைஞர்கள் மட்டுமல்ல புலம் பெயர்ந்த ஈழத்துக் குழந்தைகளுக்கும் நம்முடைய அவலத்தை வணிகப்படுத்துவதன் மூலம் எளிதில் சென்றடையச்செய்ய கடமைப்பட்டுள்ளோம். இதற்கான வழிகளை தமிழ்சசியும், நந்தனும் அலசி இருக்கிறார்கள்.

ஆனால் இங்கே நாம் முன்வைப்பது, தற்போதைய புலம் பெயர்ந்தவர்களின் மன நிலையையும், வாழ்க்கைப் போராட்டத்தையும் தான். பெரும்பாலான ஆண்கள் ஈழப் போராட்டத்தையும், போராளிகளின் போரையும் ஆதரிக்கின்ற வேலையிலே பெண்களின் மன நிலையையும் நாம் அறிந்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. இங்கே நான் எனது தோழிகளொடு கதைத்ததை மட்டுமே உதாரணமாக வைக்கிறேன். போராளிகளின் பற்றிய அவர்களின் புரிதல் மிகவும் வித்தியாசமானதாகவே இருந்தது. புலிகளின் ஆய்தப் போராட்டத்திற்கு முன்னர் அவர்கள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்ததாகவும், ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரெ மின்சாரம் முதற்கொண்டு அனைத்து அத்தியாவசியத் தேவைகள் தடைபட்டதாகவும் தெரிவிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் அவர்களுடைய பதின்ம வயதின் ஆசைகள் நிராசையாகி நாடோடியாகச் சுற்றுவ(றிய)தற்கு காரணம் ஆயுதப் போராட்டமே என்றும் எண்ணியுள்ளனர். நான் அதை மறுதலித்துப் பேச முற்படும் பொழுது மூக்குடைபட்டே இருக்கிறேன்.(நீ படித்தும், வீடியோவில் பார்த்தும் இருப்பாய், நான் அனுபவித்திருக்கிறேன் என்று)

ஆக இப்பொழுதிருக்கும் இரண்டாம் தலைமுறையினரே இவ்வாறு இருக்கும் பட்சத்தில் மூன்றாம் தலைமுறையினருக்கு இது பற்றி தெரிய படுத்த வாய்ப்பு இருக்கிறதா?
செருமனியில் நாஜிப் படையினரால் யூதர்கள் பட்டத் துன்பங்களை (திரைப்படங்களில்) காணும் பொழுது ஏற்படும் பரிதாப உணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே ஈழத்து அவலங்கள் வெளியே தெரிய வாய்ப்புள்ளது. மேலும் இது பற்றியான குறும்படங்களையும் அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாக கிடைக்க வழி செய்ய வேண்டும்.

சமீபத்தில் "பேட்டல் ஆஃப் அல்ஜீர்ஸ்" என்ற திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அத்திரைப்படம் அல்கீரிய மக்களின் ஃபிரெஞ்சுக் காலணி ஆதிக்கத்திற்கெதிரான சுதந்திர போராட்டத்தைப் பற்றியது. அதில் போராளிக்குழுவின் தலைவனை சிறைபிடித்து நாடு கடத்தி விடுவார்கள். ஆனாலும் இரண்டு அமைதியான ஆண்டுகள் கழித்து நாடே ஸ்தம்ப்பிக்கும் வகையில் மக்களின் போராட்டம் வெடிக்கும். அதுவே 1960 களில் அல்ஜீரிய சுதந்திரத்திற்கு வழி வகுத்தது.ஈழப் போராட்டத்திற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்றாலும் ஈழத்து மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதில் உள்ள ஆர்வமே இதை உதாரணமாக எடுத்தாள வேண்டியதாயிற்று.

தமிழிழ தேவையும் தமிழ் தேசியமும்

இன்றைய மக்கட்தொகையில் ஏறக்குறைய 81/2 கோடி தமிழ் மக்களைக் கொண்டுள்ள இவ்வுலகில் நமக்கென்று ஒரு அங்கீகாரம் இல்லை...2 மில்லியன் மக்கட்தொகை கொண்ட சுலுவேனிய நாடு உருவானது மொழி, இனத்தின் அடிப்படையிலேயே. ஈராஇய, ஈராக்கிய, சிரிய, துருக்கிய தேசங்களும் இன்று வரை சுயமாக இயங்கிக் கொண்டிருக்கும் சதாமின் அடக்குமுறையில் ஒடுக்கப்பட்ட குர்தீய தேசக் கோரிக்கைகளும் மொழி இனத்தின் அடிப்படையிலேயே. வெரும் 2 மில்லியன் மக்கட்தொகை கொண்ட சுலுவேனிய மக்களின் சார்பாக அவர்களது மொழியில் பேசுவதற்கு அவர்களுக்கு அங்கீகாரம் அளித்து ஐநா சபையில் குரலெழுப்பிக் கொண்டிருக்கும் வேலையிலே நமக்கென்று ஒரு தேசமும் அங்கிகாரமும் தேவை என்று குரல் எழுப்புவது தவறா? தமிழ்நாட்டில் இதற்கான குரல் எழும்பொழுது தமிழக உணர்வாளர்களின் குரல்வலை நெறிபடும் வேளையிலே நம் ஈழத்து சகோதரர்கள் சுயமரியாதையோடு வாழ நாம் துணை நிற்க வேண்டாமோ? தமிழன் தலை நிமிர, தனக்கென்று ஒரு கலாச்சாரம், பண்பாடு மற்றும் உலக அளவில் தமிழனுக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தோடு வலம் வர முதல் படியாக தமிழீழம் அவசியமாகிறது.
பின்குறிப்பு: இராஜிவ் கொலையில் புலிகளுக்கெதிரான நிலையில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன். எனக்குப் பட்டதை சொல்ல எனக்கு முழு உரிமையுண்டு.

8 comments:

said...

"சமீபத்தில் " த பேட்டல் ஃபார் அல்ஜீர்ஸ்" என்ற திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அத்திரைப்படம் அல்கீரிய மக்களின் பெல்ஜியக் காலணி ஆதிக்கத்திற்கெதிரான சுதந்திர போராட்டத்தைப் பற்றியது. அதில் போராளிக்குழுவின் தலைவனை சிறைபிடித்து நாடு கடத்தி விடுவார்கள். ஆனாலும் இரண்டு அமைதியான ஆண்டுகள் கழித்து நாடே ஸ்தம்ப்பிக்கும் வகையில் மக்களின் போராட்டம் வெடிக்கும். அதுவே 1952 ல் அல்ஜீரிய சுதந்திரத்திற்கு வழி வகுத்தது."

அல்ஜீரியா ஒரு பிரெஞ்சு காலனி. அது 1960களில் சுதந்தரம் அடைந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

டோன்டு,
தகவலுக்கு நன்றி! திருத்திவிட்டேன்...கொஞ்சம் வார இறுதியின அசதியில் :-) இருந்ததால் கை பிசகி விட்டது!

Anonymous said...

பொட்டீக்கடை, உங்களுக்குத் தேவையில்லாத விஷயங்களில் ஏன் மூக்கைப் போட்டு இடிக்கிறீர்கள்?

said...

//பதின்ம வயதில் நான் கண்ட ஆவணப்படங்களும், நேரிடையாய் சந்தித்த இரு போராளிகளின் வாக்குமூலமும் என்னுள்ளே அவ்வயதில் வெறியை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. இன்னமும் கூட ஈழத்தில் பிறந்திருக்கக் கூடாதாவென்ற ஏக்கம் அவ்வப்போது எழுவதும் உண்டு. எந்திரத் துப்பாக்கி ஏந்திப் போராடும் எம் சகோதரர்க்கு துணையாய் இருந்திருக்கலாமே என்ற எண்ணமும் எழுந்ததுண்டு. அது ஒவ்வொரு சராசரி இந்தியனுக்கு எழும் "பிணப்பெட்டியின் மேல் தேசியக் கொடி" போன்ற எண்ணம். ஆனால் அதற்கு முரணான வாழ்க்கையைத் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.
//
ஆவணப்படங்கள், ஆத்துதிருனா, மகம், வடலூர் தை பூச திருவிழாக்களில் பார்த்த விடுதலைப்புலிகளின் கண்காட்சி ஸ்டால்கள், திலீபனின் ஒவ்வொரு நாள் உண்ணாவிரத போராட்டத்தின் நிலையையும் வானொலியில் கேட்டு கேட்டு ஒரு நாள் திலீபன் இறந்த செய்தி சொல்லப்பட துக்கம் வயிற்றை பிசைந்தது, 83 இனக்கலவரத்தில் எங்கள் வீட்டருகே குடியேறிய சில ஈழதமிழ் குடும்பங்கள் இப்படி தான் ஈழம் அறிமுகமானது எனக்கு....

//நமக்கென்று ஒரு தேசமும் அங்கிகாரமும் தேவை என்று குரல் எழுப்புவது தவறா? தமிழ்நாட்டில் இதற்கான குரல் எழும்பொழுது தமிழக உணர்வாளர்களின் குரல்வலை நெறிபடும் வேளையிலே நம் ஈழத்து சகோதரர்கள் சுயமரியாதையோடு வாழ நாம் துணை நிற்க வேண்டாமோ? தமிழன் தலை நிமிர, தனக்கென்று ஒரு கலாச்சாரம், பண்பாடு மற்றும் உலக அளவில் தமிழனுக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தோடு வலம் வர முதல் படியாக தமிழீழம் அவசியமாகிறது.
//
நம்பிக்கை தான் வாழ்க்கை, நம்புவோம்...

said...

நல்லதொரு பதிவு தொடர்ந்து தைரியமாக எழுதுங்கள், தமிழனை பற்றி பேச தமிழனுக்கு உரிமை இல்லாவிட்டால் யாருக்கு இருக்கு உரிமை, தொடர வாழ்த்துக்கள்.

Anonymous said...

தம்பி., என்னாச்சுப்பா... உங்க பின்னூட்டப் பெட்டிக்கு?.,
//தனக்கென்று ஒரு கலாச்சாரம், பண்பாடு மற்றும் உலக அளவில் தமிழனுக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தோடு வலம் வர முதல் படியாக தமிழீழம் அவசியமாகிறது. //

அருமையான பதிவு சத்யா...!

சிவனடியார் 'இந்தியா'ங்கிற வார்த்தையே கேட்டாலே இப்படிப் பலபேர் உணர்ச்சி வசப்படுகிறோம்தான். நம் அடையாளங்களை அடக்காத இந்தியா., அனைத்து மொழிகளையும், பண்பாடுகளையும் ஒன்றாக மதிக்கும் இந்தியா இருந்தால் இந்த புல்லரிப்பில் தப்பில்லை.

//வரும்போது நாடு என பார்க்க வேண்டும் நான் ஒரு இந்தியன்,நான் ஒரு இலங்கைவாசி என்பது போன்று பார்க்க வேண்டும் என்பது எனது கருத்து.//

இதில் எனக்கு உடன்பாடில்லை.

said...

நல்ல பதிவு சத்யா,

தமிழீழப்பிரச்சனை என்பது இலங்கைத் தீவின் உள்விவகாரம் என்றும் அதை விவாதத்திற்குள்ளாக்குவது அதன் இறையான்மைக்குள் தலையிடுவது என்பதும் இன்று இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது. இலங்கை என்னும் முழு அமைப்பாக அது அந்நியரிடம் அடிமைப்படவில்லை. முதன் முதலில் போர்த்துகீசியர்கள்தான் ஆக்கிரமிப்பு செய்தனர். அப்போது எதிர்த்து போரிட்டு மடிந்தவன் சங்கிலி மன்னன். தமிழீழம், சிங்களம் இரண்டும் தனித்தனி நாடுகளாக இருந்ததற்கு பல்வேறு வரலாற்றுபதிவுகள் இருக்கிறது. இலங்கையின் இனப்பிரச்சனை 1983ல் தொடங்கியது அல்ல. 1948லியே அதற்கான விதை தூவப்பட்டு விட்டது. 1956 -58 களில் தீவிரத்தன்மைக்கு சென்றது. ஆங்கிலேய அரசு சுதந்திரம் அளித்தபோது அந்தத் தீவில் உள்ள அனைவரும் சமம், அவரவர் மத, இன, பண்பாடுகள் பேணிப்பாதுக்காக்கப்பட வேண்டும் என்று கூறீயிருக்கிறது. (அரசியலமைப்பு விதி 29). ஆனால் சிங்கள அரசினால் 1960களில் அது திருத்தபட்டது. அதை எதிர்த்து கடுமையாக குரல் கொடுத்தவர் திரு.செல்வநாயகம் அவர்கள். இலங்கையில் அனைவரும் சமம் என்ற நிலையைத் தாண்டி சிங்கள பேரினவாதம் தலை தூக்கியது. அதை தமிழர்கள் எதிர்த்தனர். அரச கொடுமைகளால் தமிழர் நிலப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டன. மக்களை அவர்களின் சொந்த நிலப்பரப்பில் இருந்து வெளியேற்றி வேறு இடங்களுக்கு பெயரச் செய்தனர். இதன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டன. ஈழத்தைப் பற்றி செல்வநாயகம் குறிப்பிட்ட முக்கியமான விடயம் இங்கிருக்கும் தமிழர்கள் இம்மண்ணின் பூர்வகுடிகள். வெளியிலிருந்து வந்து குடியேறியவர்கள் அல்ல என்று. ஈழத்தின் வரலாறு தனித்தன்மையுடையது. ஈழம் தனக்கென தனித்த இறையான்மையை கொண்டிருந்தது. அதை புரிந்து கொண்டால்தான் அவர்களின் போராட்டத்தின் நியாயம் புரியும். ஆயுதப் போராட்டத்தில் அவர்கள் இறங்கியது 1983லிருந்துதான். அதற்கு முன்பு ஏறத்தாழ 30 ஆண்டுகள் அவர்கள் ஜனநாயக முறைப்படி போராடி இருக்கிறார்கள். இலங்கை என்பது ஒரு குடியரசாகவும் சிங்களம், தமிழ் போன்ற இனங்கள் தனித்தனி ஆட்சியாகவும் அவை இணைந்த நடுவண் அரசு கொண்ட குடியரசாக அமைய வேண்டும் என்றும் கூட செல்வநாயகம் அவர்களால் வலியுறுத்தப்பட்டது. ஆனால் எதற்கும் ஒத்துப்போகாதனாலேயே ஆயுதப் போராட்டத்தில் வந்து நிற்கிறது..
*
உலகில் பல்வேறு வகையிலான தேசியங்கள் இருக்கிறது. காலணி ஆதிக்கத்தில் இருந்து அவை விடுதலை பெறுவதை தடுக்க இயலாது. காலணி ஆதிக்கம் என்பதே மக்கள் மீது ஏவப்படும் வன்முறை, அடக்குமுறை, இன்றைய வார்த்தைகளில் சொன்னால் தீவிரவாதம். இன்று அவை ஆளும் அரசுகளால் செய்யப்படுகிறது.

இந்தத் தேசியங்கள் எல்லாம் மூன்று வழிகளில் அமைகின்றன. ஒன்று நிலவழித் தேசியம் இரண்டு மொழி வழித் தேசியம், மூன்று இன வழித் தேசியம்.

ஈழத்தின் போராட்டம் நிலவழி மற்றும் மொழித் தேசியம்.

இதைப்பற்றி மேலும் சொல்லிக் கொண்டே போகலாம். பதிவின் நீளம் கருதி நிறுத்திக் கொள்கிறேம்.
**

ஈழத்திற்கும் தமிழகத்திற்குமான உறவு... இது தொப்புள் கொடி உறவு. அதனால்தான் அங்கு தமிழர்களுக்கு இன்னல் நேரும் போது இங்குள்ளவர்கள் துடிக்கிறார்கள். உலகம் முழுவதும் விரிந்திருக்கும் தமிழினத்தின் ஒரு முக்கிய பகுதி இலங்கைத் தீவில் இருக்கிறது. மிக நெருக்கத்திலும் இருக்கிறது. அதனால்தான் அதன் பாதிப்புகளை இங்கும் உணர முடிகிறது. ஈழத்திற்கும் தமிழகத்திற்குமான உறவில் மிகப்பெரிய கரும்புள்ளி ராசீவ்காந்தியின் மரணம். இது தமிழர்களை இரு கத்திகளுக்கு இடையே நிறுத்திவிட்டது. தமிழக் மண்ணில் நடந்த அந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் தமிழகம் இணைந்திருக்கும் இந்தியாவின் அரசியலைப்புச் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். இதில் மாற்றுக்கருத்தேதும் இல்லை...

இந்த ஒரு படுகொலைச் சம்பவத்தை வைத்து ஈழத்து மக்களின் தேசிய போராட்டத்தை தீவிரவாதமாகப் பார்ப்பது மிகக்கொடுமை. அவர்களின் அடிப்படை உரிமைக்கான போராட்டத்தின் நியாயங்கள் உணரப்பட வேண்டும். இந்தியர்களிடம் அந்தப்புரிதல்கள் வர வேண்டும்.
*

நீங்கள் சொன்னது போல் புலம்பெயர் வாழும் தலைமுறையிடம் ஈழப்பிரச்சனையையும், அதன் வரலாறு குறித்தான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். சொகுசான வாழ்வைவிட தன்மானம் சுய உரிமை நிறைந்த வாழ்வே சிறப்பானது.

நன்றி

said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்!

அனானி,
அக்கறைக்கு நன்றி! என்னுடைய தேவையை நீங்கள் சொல்லித் தெறிய வேண்டிய வயதில் நான் இல்லை.

சிவனடியார்,
உங்களுடைய தேசியம் பற்றிய புரிதலில் எமக்கு உடன்பாடில்லை.

அப்டிபோடு அக்கா,
வருகைக்கு நன்றி!

"சிவனடியார் 'இந்தியா'ங்கிற வார்த்தையே கேட்டாலே இப்படிப் பலபேர் உணர்ச்சி வசப்படுகிறோம்தான். நம் அடையாளங்களை அடக்காத இந்தியா., அனைத்து மொழிகளையும், பண்பாடுகளையும் ஒன்றாக மதிக்கும் இந்தியா இருந்தால் இந்த புல்லரிப்பில் தப்பில்லை."

இந்திய தேசியம் என்பது ஒரு போலியான கூட்டமைப்பே. அது எனக்கும் எந்தவொரு புல்லரிப்பையும் ஏற்படுத்தியதில்லை...


முத்துக்குமரன்,
பின்னூட்டத்திற்கு நன்றி!
உங்களிடமிருந்து ஈழத்தைப் பற்றிய நீண்ட பதிவொன்றை எதிர்பார்க்கிறேன்.

"சொகுசான வாழ்வைவிட தன்மானம் சுய உரிமை நிறைந்த வாழ்வே சிறப்பானது."

அதைத் தமிழர்கள் அனைவரும் உணர வேண்டும். சொல்லித் தெரிவதில்லை இவ்வார்த்தைகள்!

ஈழத்தவருக்கு, நாங்களும் உங்களுடைய ரணத்தின் வேதனையை பகிர்ந்து கொள்கிறோம் என்பதை தெரிவிப்பதே இப்பதிவின் நோக்கம்.