நன்றி!
நானும் மேற்சொன்ன அந்த பதிவை படித்துவிட்டு அங்கே கொடுத்திருந்த இணைப்பை சொடுக்கினால், மாரடைப்பே வந்துவிட்டது. பொட்"டீ"கடை யையும் இரு புண்ணியவான் கள் முன்மொழிந்திருக்கிறார்கள். சரி, நல்ல மனசுக்காரங்க...அவிங்களும் பை பர்த் நல்லவைங்களாத் தான் இருந்திருப்பாய்ங்கன்னு நினைத்துக் கொண்டே இன்னபிற பக்கங்களையும் சொடுக்கினால், இவ்வுலகின் ஒவ்வொரு கணமும் ஆச்சரியத்தை உள்ளடக்கியது என்பது போல... "கில்லி" (இது நிச்சயமாக தமிழ்வலைப்பதிவு கிடையாது, சொந்தமான ஆக்கங்களும் அவ்வளவாக இல்லை)யை அதிகபட்சமாக பத்துபேர் முன்னும் பின்னும் மொழிந்திருக்கிறார்கள். எனக்கேற்பட்ட சந்தேகம் என்னவென்றார் முன்/பின் மொழிந்தவர்கள் அனைவருக்கும் தமிழ் தெரியுமா? அல்லது தமிழ் வலைபதிவர்கள் மட்டும்தான் முன்/பின் மொழிய முடியுமா? அப்படியென்றால் கில்லியின் பக்கத்தில் வெளியாகியிருக்கும் ஏன் கில்லி? என்ற பக்கத்தை படித்தார்களாவென பல கேள்விகள் எழும்புகிறது.


அதெல்லாம் தெரிந்தபின்னும் அல்லது படித்தபின்னும் அவர்கள் கில்லியை முன்/பின் மொழிந்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு மூளை வளர்ச்சி அல்லது மூளைச் சிதைவு ஏற்பட்டிருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது. விளம்பரப் பிரியரான பிரகாசுக்கு இப்பதிவும் ஒருவகையில் விளம்பரம் தான். ஆனால் சன் டிவி அளவிற்கு "எக்ஸைட்" ஆகி இங்கே அவர் சல்லியடிக்க முடியாது. அவருடைய் நண்பர்களான இண்டிப்ளாக்ஸ்ன் நடுவர்கள் பத்ரி, முகமூடி ஆகியோர் படிப்பதற்காக கில்லியில் இருந்து திருடிய ஏன் கில்லி?
ஏன் கில்லி என்ற பக்கத்தில் உள்ள, உள்ளது உள்ளபடி...
ஏன் கில்லி?
நாங்கள் வாசிக்கிற, ரசிக்கிற, வேறுபடுகிற, பிறருக்குச் சுட்டிக் காட்ட வேண்டும் என்று நினைக்கிற, விவாதத்தைக் கிளப்பி, குளிர் காயவேண்டும் என்று எண்ணுகிற, பாதுகாத்து வைக்க வேண்டும் என்று நினைக்கிற சுட்டிகளின் கிடங்கு இது.
இது, நாலைந்து நண்பர்கள், அவர்களுக்குப் பிடித்த பதிவுகளைச் சேமித்து வைத்து, அழகு பார்க்கும் ego trip அல்ல. நானும் பாலாஜியும் நண்பர்கள் தான் என்றாலும், ரசனைகளிலும், ஆர்வங்களிலும், நிலைப்பாடுகளிலும் வேறுபாடு கொண்டவர்கள். இந்தத் தன்மை கில்லியில் பிரதிபலிக்கும். இது போலவே, இன்னும் கொள்கை அளவில் முரண்படுகிறவர்கள் சிலரும் இந்தக் குழுவில் இணைவார்கள். தமிழ் சார்ந்த விஷயங்கள் குறித்த ஆங்கிலப் பதிவுகளும் இதிலே இடம் பெறும்.
கில்லியில் original content மருந்துக்கும் கிடையாது. இது ஒரு எச்சரிக்கை..
இதைத் தவிர, கில்லியில் வேறு என்ன நடக்கும் என்று இப்போதைக்கு ‘சொல்வதில்’ ஆர்வமில்லை.
கில்லியின் குறிக்கோள்களாக Common Minimum Programme:
- நூறு நாள் விடுமுறையாக நீங்கள் காஷ்மீர் சென்றாலும் அல்லது ஒரு வாரம் சத்தியமங்கலத்தில் கடத்தப்பட்டாலும் விட்டுப்போன வலைப்பதிவுகள் எல்லாவற்றையும் புரட்டுவது சாத்தியமல்ல. அப்பொழுது கில்லி பயன்படும்.
- எழுத ஐடியா தோன்றாதபோது, கில்லியைப் புரட்டினால் பாப் கல்ச்சரும் வலை மிக்ஸரும் கிடைக்கும்.
- நீளமாக, காத்திரமாக, ஆழமாக ஒரு பதிவு இருப்பதால் தவறவிட்டுவிடுவதும், obvious என்று எண்ணி ஒதுங்குவதும், taboo என்று விலக்கிக் கொள்ளும் சமாச்சாரும், இருக்கும்.
- முடிந்தவரை கருத்து தீர்ப்பளிக்காமல், கைகாட்டியாக அமையும்.
- நண்பர்களின் பரிந்துரைகளைத் தாங்கி வரும் போஸ்ட்களையும், தடுக்கிவிழும் தக தகக் குறிப்புகளையும், சுட்டி சொக்கப்பானையில் கிளம்பும் ராக்கெட்களையும் கொண்டு தமிங்கிலரின் பதிவுகளை கோர்க்கும்.
- கஷ்டப்பட்டு பத்து பாயிண்ட் வர வேண்டுமே என்றெல்லாம் மினுக்கிடாமல், சட்டு புட்டென்று பிடித்த பதிவுகளைப் பகிரும்.
- கூடியமட்டும் நேரடி செய்திகளைக் கொடுக்காமல், வலைப்பதிவர்களின் எண்ணங்கள் மூலம் முக்கியத்துவமான நிகழ்வுகளை காட்டும்.
- Zeitgeist, buzz, என்று முடிந்தவரை பீட்டர் விடும்.
- கூட்டணி அரசியலின் குழப்பத்துடனும், மாற்று சினிமாவின் மெஸேஜ்களுடனும், நவீன ஓவியத்தின் புரியிலி தாக்கங்களுடனும் செயல்பட்டாலும், ரஜினி பட்த்தையும் கமல் படத்தையும் ஒரே நாளில் வெளியிட்டு எதற்கு செல்வது என்று குழம்பவைக்கும் தன்மையுடன் பல ரசனைகள் உங்களை வரவேற்கும்.
அன்புடன்
பிரகாஷ் & பாஸ்டன் பாலாஜி
Indibloggies Awards 2006
இண்டிப்ளாக்கீஸ் விருதுகள் 2006க்கான மனு தாக்கல் ஆரம்பமாகிவிட்டது. யார் வேண்டுமானாலும் தங்களுக்கு விருப்பமான பதிவை இவ்விருதுக்காக முன்மொழியலாம். மற்றவர்கள்தான் செய்ய வேண்டுமென்றில்லை, தன் பதிவின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் 'நமக்கு நாமே' திட்டத்தில் தமது பதிவை தாமே முன்மொழியலாம். பிப்ரவரி திங்கள் ஐந்தாம் நாள் இந்திய நேரம் இரவு 9 மணிக்கு பரிந்துரைப்பதற்கான கெடு முடிவடைகிறது.
எப்படி முன்மொழிவது என்பதற்கான விளக்கம் இந்த சுட்டியில் காணலாம்
இந்த வருட(மு)ம் பல பிரிவுகளாக இப்போட்டி நடத்தப்படுகிறது. தமிழில் மட்டும் எழுதப்படும் பதிவுகள் Best Indic blog பிரிவில் வரும்.
இவ்வருடம் சிறந்த தமிழ்ப்பதிவாக தேர்ந்தெடுக்கப்படும் பதிவுக்கு பரிசாக (இதுவரை) முகமூடி ரூ.1000 மதிப்பிலான புத்தகங்களும், தமிழோவியம் $25 மதிப்புக்கான அமேசான் பரிசு அட்டையும் தரவிருப்பதாக தெரிகிறது. நீங்கள் தமிழ் பிரிவிலோ அல்லது வேறு ஏதாவது பிரிவிலோ சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் பதிவுக்கு பரிசுகள் தர விரும்பினால் இங்கே தெரிவிக்கலாம்
இவ்வருடம் தமிழ் பிரிவுக்கான ஜூரி குழுவில் தமிழ் வலைஞர்கள் பத்ரி சேஷாத்ரியும், முகமூடியும் இருப்பதாக இண்டிப்ளாக்கீஸ் வலைக்குறிப்பு தெரிவிக்கிறது.
இவ்விருது சம்பந்தமாக 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' சிலவற்றுக்கு இந்த சுட்டியில் பதில்கள் தரப்பட்டுள்ளன.
நம்பிக்கை இருப்பவர்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்.
12 comments:
மாப்பூ வெச்சிட்டியே ஆப்பூ!
எச்சூஸ்மி பொட்"டீ"...உங்கள் பதிவில் சொல் குற்றம் உள்ளது யுவர் ஹானர்.
//விளம்பரப் பிரியரான பிரகாசுக்கு இப்பதிவும் ஒருவகையில் விளம்பரம் தான். ஆனால் சன் டிவி அளவிற்கு "எக்ஸைட்" ஆகி இங்கே அவர் சல்லியடிக்க முடியாது. //
திரு. பிரகாஸ் கில்லி மட்டுமே அடிப்பார் சல்லிக்காசுக்கு கூட சல்லி அடிக்கமாட்டார்.
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா :-)
முத்துகுமரன்.
பிளாக் ஐடி எடுத்துக்க மாட்டேங்குதுபா உன் கருத்து பொட்டி
kalaku nanpaa kalaku
:))))))))))))))))))
nethu pirakash itam ithu kuRithu keetain onnum sollavillaiyee :))
பொட்டீக்கடை :
நீங்க, உங்க சந்தேகங்களை என் கண்ணிலேயும் படற மாதிரி பொதுவிலே வெச்சதினாலேதான், இந்த மாதிரி ஒரு கோணம் இருக்கிறதே புரியவந்தது. நாலைஞ்சு நண்பர்களுக்குள்ளாகவே, கமுக்கமாக சர்க்குலேட் பண்றதுக்கு பதிலா, எனக்கும் தெரிகிறமாதிரி உங்கள் அபிப்ராயம் இருப்பதினாலே, நீங்க எழுப்பியிருக்கிற சந்தேகங்களுக்கு பதில் சொல்லவேண்டியதும், இறுதியிலே சொல்லியிருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களுக்கும் நன்றி சொல்ல வேண்டியதும் கடமையாகிறது.
ப்ளாக், அல்லது வலைப்பதிவு என்ற உடனே, அது பலரும் நினைக்கிறார்போல, நீள நீளமான கட்டுரைகள் *மட்டும்* எழுதுகிற விஷயம் என்று நான் நினைக்கவில்லை. பிடிச்ச சுட்டிகளை சேமிப்பது, சமையல் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்வது, வேலை வாய்ப்புச் செய்திகளை சேமித்து பிறருடன் பகிர்ந்து கொள்வது, படைப்புகளை மட்டுமே எழுதுவது என்று, ப்ளாக் ஃபார்மேட்டில் எழுதுகிற எல்லாமுமே வலைப்பதிவுகள் தான் என்பது தான் என் நினைப்பு. அதனாலேதான், வலைப்பதிவுத் தேர்தல் வந்ததும், கில்லி என்கிற வலைப்பதிவை, நாமினேஷனுக்கு சமர்ப்பித்தேன்.
நான் விளம்பரப் பிரியன் என்கிற ரகசியம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்று சுத்தமாக விளங்கவில்லை.உங்களுக்கு என் மீதோ அல்லது நான் எழுதுகிற விஷயத்தின் மீதோ ஏதாவது வருத்தம்/கோபம்/எரிச்சல் இருந்திருந்தால், விளம்பரப்பிரியம் என்கிற மேட்டரை விட பொருத்தமாக, ' பார்ப்பனர்களின் அடிவருடி', சுஜாதாவின் தொண்டரடிப்பொடி, ரஜினிகாந்த் ரசிகன், பிட்டுப் படம் பார்க்கிறவன், சொட்டைத் தலையன், தண்ணிப் பார்ட்டி, நடுநிலை ஜல்லி, 'இவன் தான் இட்லிவடையா' என்றெல்லாம் எளிதாகவே 'ஆதாரங்கள்' கிடைத்திருக்குமே... அதை விடுத்து 'விளம்பரப் பிரியன்' என்ற வீக்கான விஷயத்தைத் தொட்டிருக்கிறீர்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு விளம்பர மோகம் உண்டு. அதை எப்படிச் செயல்படுத்தி, கில்லிக்கு 'வரத்தை' எப்படி அதிகரிப்பது என்று தெரியாமல் தான் குழம்பிக் கொண்டிருக்கிறேன். 'சன் டிவியின் கில்லியின் ஜல்லி' பற்றி சொல்லி இருந்தீர்கள். இன்னும் இருக்கிற மெய்ன்ஸ்ட்ரீம் மீடியாவில் எல்லாம் சந்து கிடைக்குமா என்று பார்க்கிறேன், ஒன்றும் தேற மாட்டேன் என்கிறது.
கில்லி துவங்கிய உடனே, என் யாஹூ, ஜிமெய்ல் முகவரிப் புத்தகங்களில் இருப்பவர்களுக்கு எல்லாம் ஒரு மடல் தட்டி விடலாமா ( கொஞ்சம் சங்கடமாக இருந்தது ) அல்லது சும்மா ஒரு கர்ட்டசி மடல் எழுதி, கையெழுத்தின் அடியில் கில்லியின் சுட்டியைத் தரலாமா ( இது திருட்டுத்தனம்) அல்லது என் வலைப்பதிவிலே, ஒரு இடுகை எழுதி, தங்கள் வலைப்பதிவுகளில் கில்லிக்கு சுட்டி ( backlink) தரச் சொல்லி வேண்டுகோள் வைக்கலாமா ( இது பிச்சை) என்று யோசித்து, எதுவுமே வேண்டாம் என்று முடிவுக்கு வந்தோம். மேற்கண்ட வழிகளில் ஏதாவது ஒன்றைச் செய்திருந்தால் , துவங்கி மூன்று மாதங்களுக்கு மேலாகியும், ஒரு நாளைக்கு நாலைந்து பேர் மட்டுமே வந்து போய்க்கொண்டிருந்த காலத்தில், வாராது வந்த மாமணியாக இருந்திருக்கும்.
கில்லியின் பங்கேற்பாளர்களையே, ' சார், மேடம்... உங்க ப்ளாகுலே கொஞ்சம் பேக் லிங்க் குடுங்களேன்.... நாலு பேர் தெரிஞ்சுக்குவாங்க" என்று சொல்லவே ரொம்ப யோசனையாக இருந்தது. பிறகு அவர்களே, போனால் போகுது என்று கொடுத்தார்கள். எதுக்குச் சொல்ல வருகிறேன் என்றால், எனக்கு விளம்பரப் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே உண்டு. ஆனால், உருப்படியான வழிதான் தெரியவில்லை.
நண்பர் ஒருவர் ( பாஸ்டன் பாலாஜி அல்ல), வலைப்பதிவர்கள் பட்டியல் ஒன்றைக் கொடுத்து, இந்தப் பதிவுகளில் தினமும் மறுமொழி கொடுத்தால், உன் டிராஃபிக் எகிறும் என்று 'அட்வைஸ்; கொடுத்தார். அவ்வளவு எனர்ஜி இப்ப இல்லை.
என் முகம்பார்க்கும் கண்ணாடிக்கு நான் இன்றும் என்றும் அரவிந்தசாமிதான். அது போல நான் எழுதும் பதிவு தான் எனக்குச் சிறந்தது. அதைக் கூட, என் எழுத்தில் இருக்கும் நம்பிக்கையின் மீதோ அல்லது தெரிவு செய்யும் இடுகைகளின் தரத்தை வைத்தோ சொல்லவில்லை. பங்களிப்பைப்பொறுத்தவரை ஐந்தில் ஒரு மடங்கான என் பங்கு தவறாக இருந்தாலும், மீதமுள்ள நான்கில் ஐந்து பங்கு தேறும் என்ற நம்பிக்கையில் தான் செய்தேன். நான்கு வருடங்களாக சோல் ப்ரொப்ரைட்டராக இருந்து எழுதி வரும் என் சொந்தப் பதிவை நான் நாமினேட் செய்து, ஜூரிகளுக்கு இம்சை தரவில்லை என்பதைச் சேர்த்து வைத்துப் பார்த்தால் நான் சொல்வது புரியும்.
ஆக, நான் விளம்பரப் பிரியன் அல்ல. விளம்பர வெறியன். என் பங்களிப்பை, நான்கு பேர் படித்தால் பற்றாது நானூறு பேர் படிக்கவேண்டும் என்று ஆசைப்படும் வெறியன். கூகிள் ஆட்வேர்ட்ஸ் மூலமாக விளம்பரப் படுத்தலாமா, அதற்கு ஆகும் செலவை எப்படிச் சமாளிப்பது என்று கணக்குப் போடும் விளம்பர வெறியன். ஆனால், உங்களின் இந்த இடுகை மூலம் கிடைக்கும் விளம்பரம் கிடைக்கும் என்று சொல்வது மட்டும் ஒப்புதலாக இல்லை. அந்த மாதிரி டிராஃபிக் எல்லாம் வேண்டாம். ஒட்டாது. அதனால், இந்த இடுகையை மட்டும் வைத்துக் கொண்டு, தொடர்புடைய சுட்டிகளை நீக்கிவிடுங்கள். 'அப்பாடா நம்ம மூலமாக இந்த எழவெடுத்த சைட்டுக்கு யாரும் போக மாட்டார்கள்' என்ற திருப்தியாவது உங்களுக்கு கிடைக்கும்.
உங்கள் இடுகையைப் பார்த்த உடனே, 'நான் பதிவு எழுதிட்ட்டேன்..." "எனக்கு ஒரு பின்னூட்டம் வந்துடுச்சு..." " எனக்கு நாலு பின்னூட்டம் வந்துடுச்சு.." என்று தமிழ்மணம், தேன்கூட்டிலே இலவச விளம்பரம் குடுக்கிறவர்களை எல்லாம் நிறுத்தச் சொல்லு... நான் நிறுத்தறேன்.." என்று வேலுநாயக்கர் போல பஞ்ச் டயலாகு அடிக்கலாம் தான். ஆனால், தமிழ்மணம் தேன்கூடு போன்ற தன்னார்வச் சேவைகளை, 'நோட்டீஸ் போர்ட் ஒட்ட்ற எடம்' என்கிற அளவுக்கு டவுன்க்ரேட் செய்வானேன் என்று தோன்றியது.
இந்த வலைப்பதிவுத் தேர்தலைப் பொறுத்தவரை, தங்கள் பதிவுகளை தாங்களே நாமினேட் செய்து கொள்ளலாம் என்கிற விதி இருந்தபடியாலும், என் பதிவை, ஒரு தமிழ் வலைப்பதிவு என்று நம்பியபடியாலும், தான் நாமினேட் செய்தேன். இது இறுதி கட்ட தேர்தலுக்கு தெரிவு செய்யப்பட்டால், தெரிவு செய்த ஜூரிகளைக் கேட்கலாம் அல்லது ஒரு வேளை ஜெயித்தே விட்டால், ஓட்டுப் போட்டவர்களைத் திட்டலாம். அதை விடுத்து, உங்கள் கோபம் என் மீது ஏன் பாய்கிறது என்று புரியவில்லை.
இதைத் தவிர, வேறு சில காரணங்களும் இருக்கின்றன, இந்த விஷயத்தில் அது வெடித்தது என்று நீங்கள் நினைத்தால், அது என்ன என்றாவது சொல்லவும், சபாட்டிகலில் (நான்) இருக்கிற இந்த நேரத்தில், நிதானமாக யோசித்து சரி செய்து கொள்ள உதவும்.
நன்றி.
//ப்ளாக் ஃபார்மேட்டில் எழுதுகிற எல்லாமுமே வலைப்பதிவுகள் தான் என்பது தான் என் நினைப்பு. அதனாலேதான், வலைப்பதிவுத் தேர்தல் வந்ததும், கில்லி என்கிற வலைப்பதிவை, நாமினேஷனுக்கு சமர்ப்பித்தேன்.
//
அய்யய்யோ இப்படி நீங்க நினைக்கறது தெரியாம கழுகு பதிவில் நீங்க எப்படி சொல்லலாம்னு கழுகுவை கலாய்ச்சிட்டேனே.... இன்னும் கழுகு அந்த பின்னூட்டத்தை ரிலீஸ் செய்யலை....
நண்பர் வரவனையான், நீங்க என்ன கேட்டீங்க நான் என்ன சொல்லலை? :-)
நடேசன் பூங்காவில் இருந்து புறப்படுகின்ற நேரத்தில் தான் நாம் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆனோம். ஈகிளில் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த போது, " வில்ஸ் எல்லாம் இப்ப மார்க்கெட்டில் இருக்கா" என்று நான் கேட்டதற்கு, ஆமாம் இருக்கு என்று பதில் சொன்னீர்கள். பிறகு 'இஞ்சி' பற்றி விலாவரி எடுத்து உட்ட நேரத்தில் ஏதோ கேட்டேன்.. நீங்க பதில் சொன்னீர்கள்... பிறகு இண்டிப்ளாகீ தேர்தலில், ' அது எப்படி பத்ரியும், முகமூடியும் முடிவு செய்தால் போதுமா என்கிற ரீதியில் சந்தேகம் எழுப்பிய போது, சென்ற வருடம் நான் ஜூரியாக இருந்தேன் என்பதை வைத்து, அவங்க இது போலத்தான் நடத்தறாங்க என்று சொன்னேன்.
இவை தவிர, கில்லி பற்றியோ, அதிலே நான் செய்த சுயநாமினேஷன் பற்றியோ, நாம் பேசிக் கொள்ள வேயில்லையே? ஒருவேளை கொஞ்சம் மப்பு ஓவரகி, முன்னாடியே கிளம்பினேனே, அப்ப ஏதாச்சும் உளறினனோ? ஆமான்னா, அதை எல்லாம் கணக்கில எடுத்துக்கபடாது :-)
பிரகாஷ்,
தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.
வருகைக்கும், உங்களிடமிருந்து எவ்வித பதிலையும் நான் எதிர்பாராத நிலையில் நீங்கள் சொன்ன தெளிவான கருத்துக்கும் நன்றி!
//இறுதியிலே சொல்லியிருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களுக்கும் நன்றி சொல்ல வேண்டியதும் கடமையாகிறது. //
அந்தக் குடியரசி தின வாழ்த்து முகமூடியின் பதிவில் நாம் திருடிய எழுத்துக்களோடு ஒட்டிக் கொண்டுவிட்டது அதனால் உங்களது நன்றியை முகமூடிக்கு ஃபார்வர்ட் செய்யப்படுகிறது.
//ப்ளாக், அல்லது வலைப்பதிவு என்ற உடனே, அது பலரும் நினைக்கிறார்போல, நீள நீளமான கட்டுரைகள் *மட்டும்* எழுதுகிற விஷயம் என்று நான் நினைக்கவில்லை. பிடிச்ச சுட்டிகளை சேமிப்பது, சமையல் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்வது, வேலை வாய்ப்புச் செய்திகளை சேமித்து பிறருடன் பகிர்ந்து கொள்வது, படைப்புகளை மட்டுமே எழுதுவது என்று, ப்ளாக் ஃபார்மேட்டில் எழுதுகிற எல்லாமுமே வலைப்பதிவுகள் தான் என்பது தான் என் நினைப்பு. அதனாலேதான், வலைப்பதிவுத் தேர்தல் வந்ததும், கில்லி என்கிற வலைப்பதிவை, நாமினேஷனுக்கு சமர்ப்பித்தேன்.//
நீங்கள் நாமினேசனுக்கு சமர்ப்பிப்பதும் சமர்ப்பிக்காததும் உங்களது விருப்பம். ஆனால் மற்ற வலைப்பதிவுகளோடு உங்களது வலைப்பதிவை எப்படி ஒப்பிடுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் உங்களது முயற்சியான "கில்லி" முற்றிலும் வித்தியாசமானதொரு முயற்சி. ஒரு பல்சுவை சேமிப்புக் கிடங்கு என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை. இன்னமும் சொல்லப்போனால் உங்களது "கில்லி" ஒரு அட்வான்ஸ்டு வெர்ஷன் ஆஃப் தமிழ்மணம் (அ) தேன் கூடு. இவ்விரு திரட்டிகளும் அனைத்து குப்பைகளையும் திரட்டுகின்றன. உங்களது கில்லி உங்களுக்கு பிடித்த அல்லது வித்தியாசமாகத் தோன்றுகிற பதிவுகளோ அல்லது இடுகைகளையோத் தேர்ந்தெடுத்து சேமித்து பிறரது பார்வைக்கு கொடுக்கிறீர்கள். இதை எப்படி மற்ற வலைப்பதிவுகளோடு ஒப்பிடுகிறீர்கள் என்றுதான் எனக்குப் புரியவில்லை. அப்படி பார்த்தால் உங்களது கில்லியை விட ஓசை செல்லாவினது இணையதளம் இன்னமும் மேலானது(ஒரு வாக்குவாதத்திற்காக சொல்வதானால்).
உதாரணத்திற்கு சென்னையில் ஒரு சிறந்த பலசரக்கு கடையைத் தேர்ந்தெடுத்து நாங்கள் பரிசுத் தரப் போகிறோம் என்று யாரோ ஒருவர் அறிவிக்கிறாரென்று வைத்துக் கொள்வோம். எல்லா பலசரக்கு கடைகளும் போட்டியில் கலந்து கொள்கின்றன. அங்கு ஒருவர் வந்து என்னுடைய கடைக்கு வந்தீர்களென்றால் சென்னையில் எங்கெங்கு எந்தெந்த பலசரக்கு கடையில் நல்ல சரக்கு கிடைக்கும் என்று எனது கடையில் சாம்பிள் வைத்துள்ளேன். அதனால் நானும் கலந்து கொள்வேன் என்று கூறினால் சிரிக்க மாட்டீர்களா? இல்லை சிரிக்கமாட்டேன் ஏனென்றால் அவனது கடையிலும் ஏதோ கொஞ்சம் சாம்பிள் வைத்திருக்கிறானே என்று நீங்கள் கூறும் பட்சத்தில் என்முகத்தில் ஈயாடப்போவதில்லை.
//உங்களுக்கு என் மீதோ அல்லது நான் எழுதுகிற விஷயத்தின் மீதோ ஏதாவது வருத்தம்/கோபம்/எரிச்சல் இருந்திருந்தால், //
சரியா போச்சு போங்க...நீங்க எழுதறதுல எனக்கென்னங்க கோவம் வரப்போவுது? நீங்க சமீபத்துல ஏதாவது எழுதினீங்களா? சாரி, அப்படியேதும் படிச்சு எனக்கு கோவம்? வரலை. கடைசியா நீங்க என்ன எழுதி நா என்ன படிச்சேன்னு நியாபகம் இல்லை ஆனா உங்களோட வலைப்பதிவை படித்து எப்படியும் ஒரு மாசம் இருக்கும். இண்டிப்லொக்ஸ்ல யாரெல்லாம் கலந்து கொள்ளலாம் என்று ஒரு வரைமுறையை சரியாக சொல்லாததால் நீங்கள் கலந்து கொண்டீர்கள் என நான் நினைக்கிறேன்.
மேலும், அது ஒளிந்துள்ள முத்துக்களை அல்லது எழுத்தாளர்களை வெளியேக் கொண்டுவருவதற்காக தான் இப்போட்டி என்னும்பட்சத்தில் ஏற்கனவே ஜூரராக நீங்கள் கலந்து கொண்ட ஒரு போட்டிக்கு நீங்களே உங்களது இணையதளத்தை அனுப்புவது உங்களை நீங்களே கீழிறக்கிக் கொள்வதாகத் தான் எனக்குப் படுகிறது.
//விளம்பரப்பிரியம் என்கிற மேட்டரை விட பொருத்தமாக, ' பார்ப்பனர்களின் அடிவருடி', சுஜாதாவின் தொண்டரடிப்பொடி, ரஜினிகாந்த் ரசிகன், பிட்டுப் படம் பார்க்கிறவன், சொட்டைத் தலையன், தண்ணிப் பார்ட்டி, நடுநிலை ஜல்லி, 'இவன் தான் இட்லிவடையா' என்றெல்லாம் எளிதாகவே 'ஆதாரங்கள்' கிடைத்திருக்குமே...//
எல்லோரும் சொல்லறத சொல்லுறதில் எனக்கு விருப்பமில்லை அதனால் தான் விளம்பரப்பிரியர் என்றேன். இணையத்தில் தமிழ் என்று சொல்லி நீங்கள் ஆடிய கில்லி தான் இன்னமும் யூட்யூபில் இருக்கிறதே. அதைப் பார்த்தாலே தெரிந்துவிடும் கில்லியின் ஜல்லி என்னவென்று. ஆக இப்போட்டியில் கலந்து கொள்வதன் மூலமோ அல்லது நீங்கள் வெற்றி பெறுவதாயிருந்தாலோ அது விளம்பரத்திற்காகத் தான் என்பதைத் தவிர வேறெதுவாக இருக்கமுடியும்?
விளம்பரம் என்றொரு வீக் பாயிண்டை பிடித்ததாகச் சொல்லி அதற்கு மட்டுமே மூன்று பத்திகள் விலாவாரியாக எழுதி ஸ்ற்றாங்கா சொன்னதற்கு நன்றி!
டேக் இட் ஈசி, மைட்! நத்திங் பெர்சனல்...
நீங்களாகவே கற்பனை செய்துகொண்டு எ எழுதிய பல விடயங்களுக்கு நான் வரிக்கு வரி விளக்கம் கொடுக்க விரும்பவில்லை.
ஈசி மைட்!
இண்டிப்ளாக்கீஸ் குண்டிப்ளாக்கீஸ் ஆய்டும் போல...
டமாசு ...டமாசு
இங்க கொஞ்சம் பாரு கண்ணா
#
தட்ஸ்டமில்
save this
The best tamil news(own original news, not copy paste from other sites) site, readers can give their feedback also....
by kuzhali to ib06Tamil ... saved by 10 other people ... 31 mins ago
பொட்டீக்கடை!
உங்கள் பதிவை படித்தேன். இரவுக்கழுகின் சம்பந்தப்பட்ட சுட்டியையும் படித்தேன். கில்லி பிரகாஷ் அவர்களின் பதிலையும் படித்தேன். இவற்றையெல்லாம் படித்துத் தொலைத்ததின் மூலம் மொத்தமாக மூளை சூடேறிப் போய் இருக்கிறது. ஒரு இழவும் புரியலை.
என்னைப் போன்ற பாமரர்களுக்காக மேட்டர் என்னவென்று கொஞ்சம் எளிதாக எடுத்துச் சொன்னால் என்ன?
லக்கி,
தமிழில் தானே எழுதியிருக்கிறேன்?
//என்னைப் போன்ற பாமரர்களுக்காக மேட்டர் என்னவென்று கொஞ்சம் எளிதாக எடுத்துச் சொன்னால் என்ன?//
தமிழ் கூட படிக்கத் தெரியாதா என்ன? எல்லாமே கட் பேஸ்ட் தானா???
அடப்பாவி மக்கா...:-))))))
Post a Comment