3/04/2007

பொருளாதார அகதிகள்


கிறிஸ்துமஸ் தீவில் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகளை உடனடியாக சிறீலங்கவிற்கு திரும்ப அனுப்பாவிடில் அவுசுதிரேலியா, நூற்றுக்கணக்கான பொருளாதார அகதிகளுக்கு தமது எல்லைகளைத் திறக்க வேண்டி வரும்.இப்படி கூறியவர் அவுசுதிரேலிய அரசியல்வாதியோ அல்லது அமைச்சரோ அல்லது அமைச்சகம் சார்ந்த அலுவலரோ அல்ல. சிங்களப் பேரினவாத அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் நிர்மல் சிறிப்பல தி சில்வா. இவரது அறிக்கை மனிதாபிமானமோ அல்லது அரசக் காரியதரிசிக்கான பொறுப்புணர்ச்சியோ இல்லாமல் குடித்துவிட்டு நா குழன்று உளருகின்ற வெற்றுக்கோஷமாக
இருக்கிறது.

இதோடு மட்டுமன்றி இன்னுமொரு வரலாற்று சிறப்புமிக்க சந்தேகத்தையும் உரக்க எழுப்பியுள்ளார். அதாவது, சிறீலங்காவில் இருந்து 40 மைல்கல் தொலைவில் உள்ள இந்திய தேசமும் தமிழகமும் சிறீலங்காவில் இருந்து உயிர்பிச்சை தேடி வரும் அகதிகளை இரு கை விரித்து அழைக்கையில்; அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கற்களுக்கு அப்பால் உள்ள அவுசுதிரேலியாவிற்கு அவர்கள் ஏன் வரவேண்டும்? பொருளாதார ரீதியில் நல்லதொரு வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தானே!வென்று...

ஆகா என்னே ஒரு பொறுப்புணர்ச்சி!!!

அடுத்ததாக பெயர் சொல்ல விரும்பா ஒரு தெற்காசிய தூதுவ காரியதரிசி இன்னுமொரு தத்துவார்த்தமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்படுவதாவது, தென் கிழக்காசியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஈழ அகதிகள் அவுசுதிரேலியாவிற்கு கடத்தப்படுவதற்காக காத்துக்கிடப்பதாகவும் அவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் சிறீலங்காவின் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக உள்நாட்டு போரில் ஈடுபட்டிருக்கும் புலிகள் பயங்கரவாத அமைப்பிற்கு தொடர்புடையவர்களெனவும் தெரிவித்துள்ளார். அத்தோடு மட்டுமில்லாமல் இம்மக்கள் ஈழத்தைவிட்டு வெளியேறி புலிகளின் அமைப்பிற்காக உதவும் வண்ணம் பொருளாதார அகதிகளாக வெளிநாடுகளுக்குப் பயனம் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.இவ்வாறு
கடத்தப்படுவதற்கு இவர்கள் புலிகளுக்கு தலா 10,000/- டொலர் வீதம் வரி செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

புலிகள், புலம்பெயர் ஈழவாசிகள் தாயகம் திரும்பும் பொழுது வரி வசூலிப்பது உண்மையென்றாலும், இவ்வாறு அகதிகளாக உயிர் பிச்சை கேட்டும் சுகாதாரமாக வாழவேண்டிய வாழ்க்கைக்காகவும் மேற்கத்திய நாடுகளுக்கு செல்வதை பொருளாதார அகதிகள் என்றழைப்பது மிகவும் ஆட்சேபகரமான ஒன்று.இதைப் பொருளாதார அகதியான நான் சொல்வதற்காக வெட்கப்படவில்லை.

இன்றோ நாளையோ அல்லது இன்று நள்ளிரவோ வல்லரசாகக் கூடிய இந்திய தேசத்தைவிட்டு வந்தேறியாக இங்கிருக்கும் நாட்டிற்கு சேவை :-)) செய்து வரி செலுத்தி வாழ்ந்துவரும் நான் பொருளாதார அகதி தான். ஆனால் அமெரிக்காவிலோ இன்னபிற வல்லரசு மற்றும் வல்லரசாக இல்லாத ஆனால் முன்னேற்றமடைந்த நாடுகளில் வசிக்கும் வருங்கால வல்லரசு இந்தியாவின் குடிமக்களை என்னவென்று அழைப்பது? ஆங்...அவர்கள் தகுதிக்கும் அறிவுக்கும் இந்திய வல்லரசால் டொலர்களில் சம்பளம் கொடுக்க இயலாதபடியினால் அவர்கள் தகுதிக்கேற்ற ஊதியத்திற்காகவும் சுகமான வாழ்க்கைக்காகவும் முன்னேறிய நாடுகளால் வரவேற்கப்படுகிறார்கள். :-))))

ஆனால் உயிர்பிச்சைக்காகவும், மூன்று வேளை சாப்பாட்டிற்காக எச்சில் தட்டுகளையும், கக்கூஸையும் கழுவுவதற்காக புலம்பெயரும் ஈழத்தமிழர்கள் பொருளாதார அகதிகளாம். அந்த மெத்தப்படித்த அரைவேக்காட்டு தூதரக காரியதரிசி உளறியுள்ளது.இந்த உளரலுக்கு சொந்தக்காரனோ அல்லது சிறீலங்காவிற்கான அவுஸ்திரேலிய தூதுவனோ கிறிஸ்துமஸ் தீவிற்கு சென்று அப்பொருளாதார அகதிகளை சந்தித்தனரா என்றால் அதுவும் இல்லை.(அல்லது எனக்குத் தெரிந்து இல்லை)

ஓரிரண்டு வருடங்களுக்கு முன் ஹோம்புஷ்ஷில் இருக்கும் ஒரு மளிகைக் கடையில் ஈழமுரசு படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதில் தற்போது நோர்வேயில் இருக்கும் ஒரு சகோதரி அவருடைய பொருளாதார அகதி அட்டை வாங்குவதற்கு முன் ஏற்பட்ட துன்பங்களைத் தொகுத்திருந்தார். அய்ரோப்பாவில் இருக்கும் அனைத்து ஈழத் தமிழகதிகளுக்கும் இங்கிலாந்து மோகம் காட்டித் தான் கடத்தப்படுகின்றனர். பல்லாயிரக்கணக்கான கள்ளத்தோனி பயனம், அதற்கப்பால் கரைசேரும் நாட்டில் உள்ள ஏஜெண்டின் கைக்கூலிகள் வன்புணறல் அது தவிர்த்து 10லிருந்து 20ஆயிரம் வரையிலான டொலர் அவிழ்க்க வேண்டும். இது அனைத்தும் சுமூகமாக முடிந்தால் கண்டெயினர் டிரக்குகளில் மூட்டைகளுக்கு இடையே மறைக்கப்பட்டு போதைப்பொருள் கடத்துவது போல் கடத்திச் செல்லுவார்கள். வழியில் ஏதாவது ஒரு பனிப்பிரதேசத்தில் இறக்கிவிட்டு இது தான் இங்கிலாந்து என்று தள்ளிவிட்டுப் போவார்கள். இது பற்றி சாருவின் எழுத்துக்களில் இருந்தும் நிறைய அறிந்து கொள்ளலாம்.


இவ்வாறு பொருளாதார அகதிகளாக பட்டம் கட்டப்பட்ட ஈழ அகதிகளை திருப்பி அனுப்பும்பொருட்டு அவுசுதிரேலிய அரசாங்கம் இந்தோனேசிய அரசாங்கத்திடம்
முன்வைத்த அகதிகளைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை அவ்வரசு ஒட்டுமொத்தமாக நிராகரித்தபட்சத்தில் இந்த 83 ஈழ அகதிகளுக்கு அவுசுதிரேலிய அரசாங்கம் அரசியற்புகலிடம் அளிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது. இந்தியாவைவிட மூன்று மடங்கு அதிகமான நிலபரப்புள்ள அவுசுதிரேலியாவில் இந்த 83 பேருக்கா இடமிருக்காது?

உண்மையில் சொல்லப்போனால் இன்றளவில் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் உயர்ந்து நிற்பதே இவ்வாறான அகதிகள், பொருளாதார அகதிகள் என்றழைக்கப்படுபவர்களால் தான்.

கடந்த வெள்ளியன்று இங்கு நடைபெற்ற ஒரு தொழில்முறை விருந்தில் ஒரு உள்ளூர் கட்டிடக்கலை நிபுணர் பின் தங்கிய அல்லது வளரும் நாடுகளைச் சார்ந்த வளரும் கட்டிடக்கலைஞர்கள் தான் அவருக்கு தேவையெனவும் அவர்கள் தான் சோர்வின்றி உழைப்பவர்கள் எனவும் என்னிடம் தெரிவித்தார்.

இன்று நகரங்கள் என்றழைக்கப்படும் அவுசுதிரேலியாவின் சில குட்டி கிராமங்கள்கூட புலம்பெயர்ந்த வந்தேறிகளாலே கட்டப்பெற்றது. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால் அவுசுதிரேலியாவின் வரண்ட செம்மண் பூமியின் நகரமான அலீஸ் ஸ்ப்ரிங்க்ஸ் நிர்மாணமும் அதன் பொருளாதார வளர்ச்சியும் ஒரு காலகட்டத்தில் அகதிகளாக வந்த பஞ்சாபிய சீக்கியர்களால் தான். இதை அவுசுதிரேலியர்களே ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை.

மேலும் வடக்கு குயின்ஸ்லாந்தின் இடாலியா மற்றும் அதற்கும் மேலுள்ள நாட்டுப்புற கிராமங்கள் குயின்சுலாந்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டது என்றால் அது மிகையாகாது. காரணம் இந்திய துணைக்கண்டத்தின் பூர்விகப் பணப் பயிர்களான வாழை, மா, கரும்பு போன்றவற்றின் விளைச்சல்கள் தான். இவையனைத்தும் இந்திய / ஈழ அகதிகளாக வந்தவர்களால் தான்.
உணமையில் சொல்லப்போனால் என்னைப்போன்ற பொருளாதார அகதிகளை விட, உழைத்து உயிரோடு வாழவேண்டும் என்ற வெறியோடு வரும் வெளிதேசத்து அகதிகளால் தான் சில நாடுகளின் பொருளாதாரம் உயர்ந்து நிற்கின்றது.

From now on, I is an ECONOMIC REFUGEE!!!

7 comments:

said...

nalla pathivuku ithaan nilai

romba varuthama iruku sathya

aanaal ithu oru mika nalla pathivu

said...

இப்போது திரைப்படங்களில் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சிகளுக்குச் சிரிப்பதை விட இந்த அரசியல்வாதிகளின் பேச்சுக்குச் சிரிப்பதுதான் அதிகமாக இருக்கிறது. அதிலும் சிறிலங்கா அமைச்சர்களிற் சிலர் சுப்பிரமணியசுவாமி அவர்களோடு போட்டியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

said...

பொட்டீ,
இப்படி சிங்கள அரசியல்வாதிகளும், சிங்கள இன வெறியர்களும் கூறுவது இதுதான் முதற் தடவை அல்ல. அப்பாவிப் பெண்கள், குழந்தைகளைக் கொன்றுவிட்டு தாம் புலிகளைக் கொன்று விட்டோம் என்று அறிக்கை விடுபவர்கள்.

இதில் சிந்திக்க வேண்டிய விடயம் என்னவென்றால், சிங்கள தேசம் தனது தவறுகளை உணர்ந்து திருந்துவதை விடுத்து இன்னும் தனது தவறுகளை மூடி மறைப்பதையும், அதற்கு நியாயம் கற்பிப்பதிலுமே கவனம் செலுத்துகிறது. இந்த இனப் பிரச்சனை இன்னும் தொடர்ந்து செல்வதற்கு அவர்கள் இந்த மனநிலையில் இருப்பது தான் முக்கிய காரணம்.

சரி, அவர் சொல்வதின் படி இவர்கள் பொருளாதார அகதிகளாக இருப்பினும், பொறுப்புள்ள ஒரு அமைச்சர் என்ன செய்திருக்க வேண்டும்?
எந்த ஒரு பொருளாதார அபிவிருத்தியும் செய்யப்படாமல் இருக்கும் தமிழர்தாயகத்தில் பொருளாதார திட்டங்களை அமுல்படுத்தி அவர்களுக்கு அங்கு வேலைவாய்ப்புப் பெற முயற்சி செய்யவேண்டும்.

இப்படிப் பொறுப்பற்ற, தவறுகளை உணர்ந்து திருந்தாத ஒரு சமூகம் சமாதனமாக மற்ற இன மக்களுடன் எப்படி வாழும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

said...

மிக அருமையான ஒரு பதிவு. ஆழமான நோக்கு. நன்றி.

said...

வரவனை,
அகதிகளாக வருகிறவர்களின் வாழ்க்கை கொடுமையிலும் கொடுமை. இதில் தாய்?தமிழகத்தில் இருக்கும் சூழ்நிலை இன்னமும் கொடுமை.

தமிழ்நதி,
வருகைக்கு நன்றி.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அதுவும் துணைக்கண்டத்தை சார்ந்த அரசாங்க பிரதிநிதிகள் மூளையை வீட்டிலேயே கழட்டி வைத்துவிட்டு தான் வெளியே கிளம்புவார்கள் போல...

வெற்றி,
உங்களது கருத்துகளுக்கு நன்றி.ஏற்கனவே வடக்கு கிழக்கு என்று பிரிந்து தொங்கி நிற்கிறது. இதில் சிங்கள பேரினவாத அரசாங்கம் எந்த பகுதியில் பொருளாதாரத்தை உயர்த்த முய்ற்சிக்கும். நேற்று ஒரு யாழ்ப்பாண நண்பரிடம் கதைத்துக் கொண்டிருந்தேன். அவர் சொன்ன ஒரு விடயம் என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

வட்டாரம் சார்ந்த இடஒதுக்கீடு என்பது தான் அது. அழகாக திட்டமிட்டு தமிழருக்குள்ளேயே பிளவுகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகள்.

மலைநாடான்,
நன்றி.
:-)

said...

மேலும் கடந்த வெள்ளியன்று அவுசுதிரேலியாவின வெளியுறவுத்துறை அமைச்சகம வெளியிட்ட அறிவிக்கையில், கிறித்துமசு தீவில் சிறைவைக்கப்பட்டிருக்கும் 83 அகதிகளும் இந்தோனேசியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டு அங்கிருந்து அவர்களுடைய அகதிகளுக்கான விண்ணப்பங்களை பரிசீலணைக்கு அனுப்பலாம் என்று கூறியுள்ளது. ஆனால் இது எந்தளவிற்கு சாத்தியம் என்பதும் தெரியவில்லை. அவுசுதிரேலியர்கள் இவ்வளவு கடுமை காட்டவேண்டிய அவசியமும் சில வேளைகளில் நியாயமாகவே தோன்றும். 2001ல் அகதிகளின் மொத்த வருகை ஐநூற்று சொச்சம்.ஆனால் 2004-2006 காலகட்டத்தில் 12,000 சொச்சம்.இதில் பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்க அகதிகள்.

ஆனால் இங்கு எவ்வளவு பேரை வேண்டுமானாலும் உள்ளே அனுமதிக்கலாம். அவ்வளவு இடம் உள்ளது.

Anonymous said...

நான் ஒரு இந்து. தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்தவன். என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா? நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா பார்ப்பனர்? எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா?