1/28/2007

தடா...

ப்ளாக்கீயும், பரக்காவும் சென்னையின் நகரப்பகுதியில் அடுத்தடுத்த தெருவினில் வசித்ததினால் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். கல்லூரியில் படிக்கும் காலத்தில் எங்களது குழு கொஞ்சம் பெரியது, சுமார் 15 பேர் இருப்போம்.ஆகையினால் மாதம் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம் கட்டாயம் இருக்கும், பருவத் தேர்வு காலங்களைத் தவிர. ஆனால் ப்ளாக்கீக்கும், பரக்காவிற்குமான பிறந்தநாள் ஒருவார கால இடைவெளியும், பருவத் தேர்வு நடைபெரும் காலத்திலும் வந்து கொண்டிருந்ததால் அவர்களுக்கு மட்டும் குழுவில் சிறப்புச் சலுகை கொடுக்கப்பட்டு இருவரும் சேர்ந்து பிறந்தநாள் விழாவிற்கான விருந்தினையளிக்கலாம் என்ற விதிவிலக்கும் இருந்தது.

ப்ளாக்கீ ஒரு இயற்கை, கலை ஆர்வளன்; பரக்காவோ ஒரு ஓவியன்; நான் அப்போது ஆரோவில்லில் அய்க்கியமாகி இருந்ததால் அங்கு பிறரோடு கதைத்த கதை கேட்ட புண்ணியத்தில் "பொட்டியை விட்டு வெளியே" யோசிப்பவன் என்ற ஒர் மாயத் தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தேன். இதனால் எந்தவொரு முடிவிற்கும், குழுவில் என்னுடைய ஆலோசனையும் கேட்கப்படும். சில நேரங்களில் "ஹைப்போதெடிக்" சிந்தனைகளை அள்ளித் தெளித்ததினால் அந்த மாயபிம்பமும் பிறிதொரு நல்ல நாளில் தகர்ந்ததென்னவோ உண்மை தான்.

ஒரு வெள்ளிக்கிழமை காலை ஐந்து மணியளவில் பரக்கா என்னுடைய கைப்பேசிக்கு "துண்டிக்கப்பட்ட அழைப்புகளை" அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தான். ஆனால் நானும் சூசூவும் "கேர்ள்ஸ் ஃப்ரீ" நைட் ஆஃபரில் சென்னையின் ஒரு குத்தாட்ட கிளப்பில் இருந்து நயனாவையும், ரித்துவையும் அவரவர் வீட்டில் இறக்கிவிட்டு ராயப்பேட்டாவில் ஒரு ஓட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்தோம். கைப்பேசியின் இடைவிடாத அலறலினால் கடுப்பாகிப் போன சூசூ என்னுடைய கைப்பேசியை பிடுங்கி பரக்காவை அழைத்தான். ஆனால் அடுத்தமுனைக்கு அழைப்பு செல்வதற்குள், உங்கள் கைப்பேசியில் போதுமான நிதியிருப்பு இல்லாததினால் இவ்வழைப்பினை மேற்கொண்டு தொடர இயலாது என அழகியின் இளங்குரல் கூறியதைக் கேட்டு மென்மேலும் எரிச்சலடந்தான் சூசூ.

அருகிலிருந்த உள்ளூர் தொலைப்பேசி அழைப்பகத்திற்கு சென்று பரக்காவின் வீட்டிற்கு மணியடித்தேன்.ஒரு சுற்றுக்குள்ளாகவே செவிமடுத்த பரக்கா, இன்று ஒரு மகா திட்டம் வைத்திருப்பதாகவும், சீக்கிரம் குளித்து தயாராக இருக்குமாறும் கூறிவிட்டு தொலைபேசியை வைத்தான். உடனிருந்த சூசூவிற்கோ பொறுக்கமாட்டாமல் மீண்டும் பரக்காவை அழைத்து; அடேய் பரக்கா, ப்ளாக்கீயும் நீயும் செய்வது கொஞ்சம் கூட நல்லது கிடையாது. என்னைக்காவது நெடுமுடியான் அறுத்து விட்டுவிடுவான். அப்பொழுது இந்த சூசூ தான் தேவைப்படுவான் என்று கூறிவிட்டு, காரில் வரும்பொழுது என்ன விஷயம் என கேட்டு நச்சரித்து சாகடித்தான்.

சரியாக ஆறு மணியளவில் ப்ளாக்கியும், பரக்காவும் யூனோவை எடுத்துகொண்டு வந்துவிட்டார்கள். வழக்கமாக பேலியோவில் வரும் "ப்ளாக்கீ" இன்று யூனோவில் வந்ததும் எனக்கு திட்டம் புரிந்துவிட்டது. பாண்டிச்சேரிக்கு சரக்கு வாங்க தான் இவ்வளவு "கட்டுமானமும்" என எனக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. ஆகையால் நான் அவர்களையேதும் கேட்காமல் அவர்கள் வழியிலேயே விட்டுப்பிடிக்கலாமென அமைதியாயிருந்தேன். முதலில் பரக்கா தான் ஆரம்பித்தான். மாமா, ஃபைனல் ப்ரெசண்டேசன் ஒத்தி வச்சிட்டாங்க., அதனால் எங்க பார்ட்டிய டிலே பண்ணாம ப்ரெசண்டேசனுக்கு முன்னாடியே ஒரு ரெப்ரெஷ்மெண்டா வெச்சிக்கலாமென்றான். அதனால் நாம இன்னைக்கு போய் எங்கேயாவது ஒரு ஸ்பாட் சேர்ச் பண்ணனும்னு சொன்னான். பளாக்கீயோ, மாப்ள சென்னைலர்ந்து 90K ரேடியஸ்ல எங்கன்னாலும் ஓகேன்னு சொன்னான். வழக்கம் போல ஈசீஆர் ரூட்ல தேடுவோம்;நீலங்கரை தாண்டி எங்கேயாவது ஒரு பீச் அவுஸ் புடிச்சு ஜமாய்ச்சிடலாம் ப்ளாக்கீ திட்டம் போட, சரியென பயனம் ஆரம்பமானது.

கோல்டன் பீச் ரிசார்ட் அருகில் வரும்போது, செல்பேசி மீண்டும் அலறியது. அழைத்தது சந்திரன், சென்னை கிறித்தவ கல்லூரியில் நான் படித்த மூன்றுமாத காலத்தில் என்னோடு மிக நட்புடன் இருந்த ஒரு திராவிடப் பாப்ஸ். தம்மு தொடங்கி புலிகட் லேக்கில் ஒரு நள்ளிரவில் கஞ்சா அடித்து
"பேய் வேட்டைக்கு" சென்றது வரை பல சம்பவங்கள் உண்டு. சந்திரன் இப்பொழுது அமெரிக்காவில் ஒரு மீன்வளத்துறை ஆராய்ச்சியாளர். அவனிடம் எங்களது காலை நேரப் பயனத்திற்கான நோக்கத்தை சொல்ல "தடா"லடியாக "தடா" டிரை பண்ணு மச்சி என்று சொன்னான். உடன், காரிலேயே ஒரு சின்ன ஆலோசனைக் கூட்டம் நடந்த்து.ஒருமனதாக தடா போகலாமென முடிவெடுக்கப்பட்டு வண்டி வடக்கு நோக்கி சீறியது.

போகும் வழியிலேயே கள்ளுக்கடை சமீபம், பஞ்சாபி தாபா ஆகியவற்றை நோட்டம் விட்டுவிட்டு நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்த கிராமத்து தார்சாலையில் ஒன்றிரண்டு கிராமங்களத்தாண்டியவுடன் செம்மண்புழுதி பரக்கும் சாலையில் குன்றுகளின் மீதான ஒன்றிரண்டு வீடுகளைத் தவிர வேறெதுவும் இல்லை. சாலையின் முடிவில் ஒரு சிறிய ஓடை. கொஞ்சம் புதியதாக இருந்தது;கிருட்டினா நதிநீர் திட்டமாக இருந்திருக்கலாம். அந்த ஓடையின் மீதான பாலத்தை தாண்டியவுடன் மணலும், பாரைகளும் நிறைந்த பாதை. சில அடிகள் சென்றவுடன் காரின் அடிப்பகுதி பாறைகற்களில் பலமாக அடிபட, வந்த வழியே திரும்பி சிறிது தொலைவில் தொழிற்கூடம் போன்றிருந்த ஒரு கட்டிடத்தின் வாசலில் வண்டியை நிறுத்தி, கட்டிடத்தின் காவலாளில் ஒரு 20/- ரூ கொடுத்துவிட்டு தடா ஓடையை நோக்கி நடந்தோம்.

சுமார் ஒரு 20? (சரியாக நியாபகம் (ஞாபகமா இல்லை நியாபகமா?) இல்லை) நிமிட நடைபயனத்திற்கு பிறகு மரம் மற்றும் மலைகளினூடே சிலுசிலுவென எந்தவொரு சலனமுமின்றி தெளிந்த நீரோடை ஓடிக்கொண்டிருந்தது. காலை நேரமாதலால் வழக்கமாக சோமபானம் உண்டு கோழிக்கறியை சுட்டுத் திண்ணும் கூட்டமேதும் இல்லை. சமவெளியான சிறிய பகுதியைத் தாண்டியது மலைப் புதர்களினூடே ஓடையையொட்டி ஒரு ஒத்தயடிப்பாதை சென்றது. அதைத் தொடர்ந்து செல்கையில் ஆங்காங்கே சிறுசிறு அருவிகளின் மேலே தெளிந்த கூழாங்கற்களின் மட்டமுள்ள தெளிந்த மீன்கள் துள்ளி விளையாடுகின்ற அகன்ற நீர்நிலைகளும் இருந்தது.

இன்னும் மேலே சென்று ஊற்றைப் பார்க்கவேண்டுமென பரக்காவும், நானும் விரும்பி இன்னும் மேலே ஏறினோம். ஆனால் போதுமென்னும் மனம் படைத்த "ப்ளாக்கீ"யோ, மாப்ளைங்களா காலை நேரமிது, மலைப்பாம்பு சிறுத்தைப்புலியெல்லாம் வரும். வீணா, என்னைக் கொலைகாரப் பயல் பட்டம் கட்டிடாதீங்கடா எனக் கேட்டுக் கொண்டதற்கிணங்க வந்த வழியே நடையை கட்டினோம். திரும்பும் பொழுது, பஞ்சாபி தாபாவின் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து மெல்லிய சோமபானமும், அடர்த்தியான பஞ்சாபி ரொட்டி சாப்பிட்டதும்; அடுத்த நாள் கொண்டாட்டம் முடிந்து வரும்பொழுது இருவரை மப்பில் மல்லாக்க கடத்திவந்ததும் தனிக்கதை.

இப்பொழுது அங்கு சாலைசீரமைப்பு பணி ஏற்பாடாகிக் கொண்டிருக்கிறதென்ற செய்தியறிந்தேன். அது எந்தவகையில் நன்மை பயக்குமென்பதில் பல கேள்விகள் எனக்குண்டு. சாலையை செப்பனிடப்படுவதன் மூலம் இன்றளவில் 25-50 என்றிருக்கும் மக்கள் போக்குவரத்து அதிகமாகும். அதற்கேற்றார் போல் குப்பைகளும் அதிகமாகும். ஆனால் அங்கு ஒரு காவல்துறைக் கண்காணிப்புஅறை ஒன்று ஏற்படுத்தி ஒரு சிறிய காவல்துறைக் குழுவும், சிற்றளவில் சாலையின் ஓரங்களில் சில உள்ளூர் வணிகங்களும் ஏற்படுத்துவதன் மூலம், சட்டஒழுங்கு-மற்றும் இன்னபிற அத்துமீறல்களை தவிர்ப்பதோடல்லாமல் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பையும் பெறலாம். இல்லையென்றால் வழிப்பறி மற்றும் உள்ளூர் தாதாக்கள் உருவாவதற்கும் வாய்ப்புகளுள்ளது.பொருளாதாரம் இடம் கொடுக்கும் பட்சத்தில் ஒரு சிறியபூங்காவையும், புதர்களினூடே செப்பனிடப்பட்ட ஆனால் இயற்கையோடு ஒன்றிய ஒரு அகன்ற ஆடுகள் நடைபாதையமைத்து "புதர்களினூடாக நடைபழகும் கலாச்சாரத்தை" ஊக்குவிக்கலாம்.

பொறுத்திருந்து பார்ப்போம்!

Watch for the most eventful grand finalé of Australian open.

GO GONZALËZ!!!

4 comments:

said...

naala pathivu nanba

said...

நன்றி, தோழா!

***
Poor Gonzales...:-(

Legendary Federer rules :-))

said...

>> "புதர்களினூடாக நடைபழகும் கலாச்சாரத்தை" ஊக்குவிக்கலாம். >>

Lovely dude!

neenga vada chennai-la niRaiya nAL irunthiruppeenga pOla!

intha pathivu nallA vanthirukku - konjam off-beat but a lot spontaneous natural. i liked it :)

said...

Neo,

Thanks to you, mate!:-))