ஒரு சாயும்கால நேரம், திருவான்மியூர் கடற்கரையில் காலாற நடந்துக் கொண்டிருந்த போது, இரு நண்பர்கள் பேசிக் கொண்டிருக்க, நான் கொஞ்சம் காது கொடுக்க, இப்படியாகப் போகிறது அந்தப் பேச்சு....
அவள்: டேய்...
அவன்: என்னடி...
அவள்: உனக்கு யாரடா பெயர் வெச்சது?
அவன்: அதெதுக்கு இப்போ?
அவள்: இல்ல, சும்மா சொல்லுடா.
அவன்: தெரியல, அப்பா தாத்தா ஒரு பேரு, அம்மா தாத்தா ஒரு பேரு அப்புறமா நட்சத்திர படி ஒரு பேரு...இப்படியா பலர் வெச்ச பேரு இருக்கு. இதுல நீ எந்தப் பேர கேக்கற?
அவள்: அய்யொ, இப்போ இருக்க பேரு யார் வெச்சது.
அவன்: அது எங்க அம்மா தாத்தா வெச்சது. அது சரி, இப்போ எதுக்கு பேர்ல ஆராய்ச்சி பண்ணுற.
அவள்: இல்லடா, சும்மா தான் கேட்டேன். சரி, உனக்கு ஒரு குழந்தை பிறந்தால் யார் பேரு வெப்பா?
அவன்: நானும் என் பொண்டாட்டியும் சேர்ந்து பேர் வெப்போம்.
அவள்: பொய் சொல்லாதடா.
அவன்: இல்லடி...உண்மையா தான் சொல்லறேன். பத்து மாசம் சுமக்கப் போறவ அவ, அவளுக்கு இல்லாத உரிமை யாருக்கடி இருக்கு.
அவள்: இல்லடா, எங்கம்மா சொன்னா. அவ எனக்கு வேற பேரு வெக்க நெனச்சாளாம், ஆனா என்னோட தாத்தா நான் தான் வெப்பேன்னு சொன்னதால அவ நெனச்ச பேரு வெக்க முடியலன்னு சொன்னாடா. சில நேரம் அழுதிருக்காடா. நீயே சொல்லுடா பத்து மாசம் சுமக்கிறவ பொண்ணு அவளுக்கு அந்த உரிமை கூட இல்லையாடா? இந்த ஆண் வர்க்கமே ஆதிக்க வெறி பிடிச்சதுடா.
அவன்: ஐய்யோ அம்மா, என்னை விட்டுடு தாயே...எனக்கு பிறக்க போற குழந்தைக்கு என் பொண்டாட்டியையே பேர் வெக்க சொல்லிடரேன்.
ஏதோ மனதில் உறைக்க, அப்படியே எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.